பாரீஸ்:33வது ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் கோலகமாகத் தொடங்கியது. முதல் நாளான நேற்று துப்பாக்கி சுடுதல், ரோவிங் (துடுப்பு படகு), டென்னிஸ், பேட்மிட்டன் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.
இதில் ரோவிங் போட்டியில் பங்கேற்ற இந்திய வீரர் பால்ராஜ் பன்வார் 4வது இடம் பிடித்து காலிறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தார். இருப்பினும் இன்று அவருக்கு ரெபகேஜ் சுற்றில் விளையாட வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கி சுடுதல் 10 மீ ஏர் ரைபிள் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரமீதா ஜிண்டால் மற்றும் அர்ஜூன் பபுதா ஜோடி 6வது இடம் பிடித்து அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தனர். இதே போல் தமிழகத்தை சேர்ந்த இளவேனில் வளரிவன் மற்றும் சஞ்சீவ் சிங் ஆகியோர் 12வது இடம் பிடித்து அடுத்த சுற்று வாய்ப்பை நழுவவிட்டனர்.
இதே போல் ஆண்களுக்கான துப்பாக்கி சுடுதல் போட்டியில், இந்திய வீர்ர சரப்ஜோத் சிங் 577 புள்ளிகளுடன் 9வது இடம் பெற்று, அடுத்த சுற்று வாய்ப்பை நூலிலையில் தவறவிட்டார். இதனைத் தொடர்ந்து மகளிருக்கான 10 மீ ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனைகள் மனு பாக்கர் மற்றும் ரிதம் சங்வான் இருவரும் களமிறங்கினர். இதில், சங்வான் 573 புள்ளிகளுடன் 15ஆவது இடம் பிடித்து வெளியேறினார்.
இறுதிப் போட்டியில் இந்தியா:ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடிய மனு பாக்கர் 580 புள்ளிகளுடன் 3ஆவது இடம் பிடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இன்று பிற்பகல் இறுதிப் போட்டி நடக்கிறது. இதில் ஹரியானவை சேர்ந்த மனு பாக்கர் இந்தியாவுக்குப் பதக்கத்தை வென்று தருவாரா என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
ஒலிம்பிக்கில் இந்தியா பங்குபெறும் இன்றைய போட்டி அட்டவணை:
துப்பாக்கி சுடுதல்:பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் தகுதி சுற்றுப் போட்டி பகல் 12.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில் இளவேனில், ரமிதா ஜிண்டால் ஆகியோர் பங்கேற்கின்றனர்.