மும்பை:நியூசிலாந்து - இந்தியா அணிகள் இடையிலான 3வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இரண்டாவது இன்னிங்சில் 152 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியில் தொடக்க வீரர்கள் கேப்டன் ரோகித் சர்மா 11 ரன்னிலும், அவரைத் தொடர்ந்து விராட் கோலி (1 ரன்), சுப்மன் கில் (1 ரன்) ஆகியோரும் அடுத்தடுத்தும் விக்கெட்டை இழந்து வெளியேறினர்.
மறுமுனையில் நம்பிக்கை அளிக்கும் வகையில் விளையாடிக் கொண்டு இருந்த மற்றொரு தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 5 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அதன்பின் இந்திய அணியின் விக்கெட்டுகள் மளமளவென சரியத் தொடங்கின. ஒருபுறம் விக்கெட் கீப்பர் ரிஷப் பன்ட் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்ல போராடிக் கொண்டு இருந்த நேரத்தில் மறுபுறம் இந்திய வீரர்கள் அவசர கதியில் ஷாட்டுகளை அடித்து ஆட்டமிழந்து வந்தனர்.
இதனிடையே நீண்ட நேரம் போராடிக் கொண்டு இருந்த நம்பிக்கை நட்சத்திரம் ரிஷப் பன்ட் (64 ரன்) அஜாஸ் பட்டேல் பந்தில் ஆட்டமிழந்தார். இதனால் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு ஏறக்குறைய மங்கிப் போனது. அடுத்தடுத்த களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.