மும்பை:கடந்த ஞாயிற்கிழமை தொடங்கிய மும்பை அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் விதர்பா அணியே டாஸை வென்றது. அந்த அணியின் கேப்டன் அக்ஷய் வாட்கர் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி, மும்பை அணி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது.
தொடக்க வீரர்களான பிருத்வி ஷா மற்றும் பூபன் லால்வானி நல்ல தொடக்கத்தையே அளித்தனர். 20 ஓவர்களைச் சந்தித்து 81 ரன்கள் எடுத்த இந்த கூட்டணியை யாஷ் தாக்கூர் பிரித்தார். பூபன் லால்வானி 37 ரன்களில் வெளியேற, அதனைத் தொடர்ந்து வரிசையாக மும்பை அணி விக்கெட்டை இழந்தது. பிருத்வி ஷா 47, முஷீர் கான் 6, ரஹானே 7, ஸ்ரேயாஸ் ஐயர் 7, ஹர்திக் தாமோர் 5 என அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து வெளியேறினர்.
பெளலிங் ஆல் ரவுண்டர் ஷர்துல் தாக்கூர் மட்டுமே அதிகபட்சமாக 75 ரன்கள் எடுத்தார். மும்பை அணி முதல் இன்னிங்ஸின் முடிவில் 224 ரன்கள் மட்டுமே எடுத்தது. விதர்பா அணி சார்பில் யாஷ் தாக்கூர் மற்றும் ஹர்ஷ் துபே தலா 3 விக்கெட்களையும், உமேஷ் யாதவ் 2 விக்கெட்களும், ஆதித்யா தாக்கரே 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இதனைத் தொடர்ந்து, தனது முதல் இன்னிங்ஸை விளையாடிய விதர்பா அணி 105 ரன்களிலேயே ஆட்டமிழந்தது. ஷர்துல் குல்கர்னி, தனுஷ் கோட்யான், ஷம்ஸ் முலானி ஆகியோர் சிறப்பாக பந்து வீசி தலா 3 விக்கெட்களை கைப்பற்றினர்.
பேட்டிங்கில் பெரிதாக ஆதிக்கம் செலுத்தாத மும்பை அணி, தனது அபார பந்து வீச்சின் மூலம் 119 ரன்கள் முன்னிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. தொடக்க வீரர்கள் சொதப்பினாலும், ஒன் டவுனில் இறங்கிய மூசிர் கான், அதனைத் தொடர்ந்து கேப்டன் ரஹானே, ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்டோர் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினர்.