மும்பை:17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நடப்பு சீசன் கிளைமாக்ஸ் காட்சியை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கும் நிலையில், பிளே ஆப் சுற்றில் தொடர ஒவ்வொரு அணிகளும் கடுமையாக விளையாடி வருகின்றன.
இதில், இன்று (மே.6) இரவு 7.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் 55வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, சன்ரைசஸ் ஐதராபாத் அணியை எதிர்கொள்கிறது. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சை தேர்வு செய்து உள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து முதல் அணியாக மும்பை இந்தியன்ஸ் அணி வெளியேறிய நிலையில், இனி வரும் ஆட்டங்களில் அந்த அணி கட்டாயம் வெற்றி பெற வேண்டிய அவசியமில்லை. அதேநேரம் அந்த அணி போட்டியின் தன்மையை மாற்றக் கூடும். சில ஆட்டங்களில் அந்த அணி வெற்றி பெறும் பட்சத்தில் அதனால் தோல்வி அடையும் அணியோ அல்லது மற்ற அணியின் பிளே ஆப் வாய்ப்போ பறிபோகலாம்.
நடப்பு சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடிய 11 போட்டிகளில் 8 ஆட்டங்களில் தோல்வியடைந்து புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. அதேநேரம் சன்ரைசஸ் ஐதராபாத் அணி விளையாடிய 10 ஆட்டங்களில் 6ல் வெற்றியும், 4ல் தோல்வியும் கண்டு புள்ளிப் பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது.