ஐதராபாத்: இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரவீந்திர ஜடேஜாவின் தோட்டத்தில் எம்எஸ் தோனி இருப்பது போன்று புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாக பரவியது. அந்த புகைப்படத்தில் ஜடேஜா செல்பி எடுக்க, பின்னால் தோட்டத்தில் தோனி பயிர்களை பார்ப்பது போன்று படம்மாக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் அதன் பின்புலம் என்ன என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 26ஆம் தேதி ரவீந்திர ஜடேஜா தனது தோட்டத்தில் இருப்பது போன்று செல்பி புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார். அதை எடிட் செய்து அந்த புகைப்படத்தில் தோனியும் இருப்பது போன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டது.
மேலும், அந்த பதிவில், "ரவீந்திர ஜடேஜா - எம்எஸ் தோனி ஆகிய இருவரும் ஒரே இடத்தில் இருந்தால் எப்படி இருக்கும் என கற்பனை செய்து பாருங்கள்" என சென்னை சூப்பர் கிங்ஸ் பதிவிட்டுள்ளது. தற்போது இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. ஜடேஜாவின் தோட்டத்தில் தோனி இருப்பது போன்ற எடிட் செய்யப்பட்ட புகைப்படம் சென்னை ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியது.
சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் அந்த பதிவின் கீழ் கலவையான விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர். கடைசியாக ஜூன் மாதம் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் ரவீந்திர ஜடேஜா விளையாடினார். 20 ஓவர் உலக கோப்பையை வென்ற கையோடு சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ஜடேஜா அறிவித்தார்.
அதைத் தொடர்ந்து இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரிலும் அவர் விளையாடவில்லை. ஓய்வில் சென்றார். அடுத்த மாதம் தொடங்க உள்ள வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் அவர் மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேநேரம் அடுத்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் தோனி கலந்து கொள்வாரா என்ற சர்ச்சை தொடர்ந்து எழுந்து வருகிறது. நடப்பு சீசனில் கேப்டன்சியை ருதுராஜ் கெய்க்வாட்டிடம் ஓப்படைத்த தோனி, அணியில் களமிறங்கும் தனது வரிசையையும் மாற்றினார். உடல் நலக் குறைவு காரணமாக அவர் மாற்றியதாக சொல்லப்பட்டது. இந்நிலையில், தொடர்ந்து அடுத்த ஐபிஎல் சீசனில் தோனி களமிறங்குவாரா என்ற சந்தேகம் நிலவுகிறது.
இதையும் படிங்க:ஐசிசி தலைவராகும் ஜெய்ஷாவின் மாத சம்பளம் எவ்வளவு? என்னென்ன சலுகைகள்? - ICC Chairman salary