ஐதராபாத்: இந்திய அணியின் ஆஸ்தான வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் முகமது ஷமி. ஒருநாள் உலக கோப்பை தொடருக்கு பின் காயம் காரணமாக தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இதனால் 20 ஓவர் உலக கோப்பை, இலங்கை, வங்கதேசம், நியூசிலாந்து தொடர்களில் அவரது பெயர் அணியில் இடம் பெறவில்லை.
இந்நிலையில், காயத்தில் இருந்து பூரண குணம் பெற்றுள்ள முகமது ஷமி மீண்டும் தனது டெஸ்ட் பிரவேசத்தை தொடங்கி உள்ளார். ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது கட்ட போட்டிகளில் முகமது ஷமி விளையாட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 13ஆம் தேதி இந்தூர் மைதானத்தில் நடக்க உள்ள மத்திய பிரதேச அணிக்கு எதிரான ரஞ்சி போட்டியில் மேற்கு வங்க அணியில் முகமது ஷமி விளையாட உள்ளார்.
இந்த மாத இறுதியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் தொடங்க உள்ளது. ரஞ்சிக் கோப்பையில் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் இந்திய அணியில் தனது இரண்டாவது இன்னிங்சை முகமது ஷமி நிச்சயம் தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய பிரதேச அணிக்கு எதிரான ரஞ்சிப் போட்டியில் முகமது ஷமி விளையாட உள்ளது குறித்து மேற்கு வங்க கிரிக்கெட் சங்க செயலாளர் நரேஷ் ஓஜா உறுதிபடுத்தியுள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற ஒருநாள் உலக கோப்பையின் இறுதிப் போட்டியில் முகமது ஷமி விளையாடி இருந்தார்.
சரியாக ஓராண்டு கழித்து மீண்டும் முகமது ஷமி ரஞ்சியில் விளையாட உள்ளார். ரஞ்சிக் கோப்பை புள்ளிப் பட்டியலில் மேற்கு வங்க 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் உள்ளது, முகமது ஷமியின் வருகையால் அணிக்கு கூடுதல் பலம் கிடைக்கும் என்று நரேஷ் ஓஜா தெரிவித்துள்ளார். முன்னதாக உடற்தகுதி பிரச்சினை காரணமாக பெங்களுரூவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் முகமது ஷமி தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டு வந்தார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சொதப்பும் பட்சத்தில் நிச்சயம் முகமது ஷமிக்கு அணியில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க:விராட் கோலி சாதனை முறியடிப்பு! சச்சினை சமன் செய்த ஆப்கான் வீரர் யார்?