பாரிஸ்:ஒலிம்பிக் விளையாட்டு போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை நடைபெற இருக்கின்றன. இதில் 32 விளையாட்டுகளில் 329 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற இருக்கின்றன. இதில் பல்வேறு நாடுகளில் இருந்து 10,500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இதில் இந்தியாவின் சார்பாக மட்டும் மொத்தம் 16 பிரிவுகளில் 117 வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில், 10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு இரட்டையர் பிரிவிற்கான தகுதிச்சுற்று நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளவேனில் வாலறிவன் மற்றும் சந்தீப் சிங் ஜோடியும், ரமிதா மற்றும் பபுதா அர்ஜூன் ஜோடியும் பங்கேற்றனர். இந்த சுற்றில் ரமிதா- பபுதா அர்ஜூன் ஜோடி 628.7 புள்ளிகளுடன் 6ம் இடத்தையும், மற்றொரு ஜோடியான இளவேனில் வாலறிவன் - சந்தீப் சிங் ஜோடி 626.3 புள்ளிகளுடன் 12வது இடத்தை பிடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.
இதனைத் தொடர்ந்து, 10மீ ஏர் பிஸ்டல் துப்பாக்கிச் சுடுதல் நடைபெற்றது. முதல் 8 இடங்களை பெறுபவர்கள் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெறுவார்கள். இதில் ஆடவர் பிரிவில் இந்தியாவின் சார்பாக சரப்ஜோத் சிங், அர்ஜுன் சிங் பங்கேற்றனர். இருவரும் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் தகுதியை இழந்தனர். அடுத்ததாக மகளிருக்கான 10மீ ஏர் பிஸ்டல் துப்பாக்கிச் சுடுதல் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியாவின் சார்பாக மனுபாக்கர் மற்றும் ரிதம் சிங்வான் ஆகியோர் களமிறங்கினர்.