பாரிஸ்: பாரிஸ் ஒலிம்பிக் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் கடந்த ஜூலை 26ஆம் தேதி கோலாகல தொடக்க விழாவுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இன்று இந்திய வீரர், வீராங்கனைகள் முக்கிய ஆட்டங்களில் விளையாடுகின்றனர். இதன்படி இன்று நடைபெற்ற மகளிர் டேபிள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் 32வது சுற்றில் உலக தரவரிசையில் 28 ஆவது இடத்தில் உள்ள இந்திய வீராங்கனை மணிகா பத்ராவுக்கும், 18வது இடத்தில் இருக்கும் பிரான்ஸ் வீராங்கனையான ப்ரித்திகா பவடேவுக்கும் பலப்பரிட்சை நடைபெற்றது. இந்த போட்டியில் மணிகா பத்ரா 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.
இந்த போட்டியில் தொடக்கம் முதலேயே ஆதிக்கம் செலுத்திய மணிகா பத்ரா 11-9, 11-6, 11-9, 11-7 என்ற செட் கணக்கில் ப்ரித்திகாவை வீழ்த்தினார். இதன்மூலம் டேபிள் டென்னிஸில் காலிறுதிக்கு முந்தைய 16வது சுற்றுக்கு தேர்வாகி வரலாறு படைத்துள்ளார். இந்திய டேபிள் டென்னிஸ் வீரர் முன் காலிறுதிக்கு(pre-quarterfinals) செல்வது இதுவே முதல்முறையாகும்.
பிரான்ஸ் வீராங்கனையான ப்ரித்திகா 2020ஆம் ஆண்டு நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக்கில் தன் முதல் சுற்றிலேயே வெளியேறினார். அதன்பின் படிப்படியாக தனது தரத்தை உயர்த்தி டேபிள் டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில் 18வது இடத்திற்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.