கோயம்புத்தூர்:8வது தமிழ்நாடு பிரிமியர் லீக் தொடர் கடந்த 5ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த அணியில் மொத்தம் 8 அணிகள் கலந்து கொண்டுள்ளன. இதில், லீக் சுற்றில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெறும். இந்நிலையில் டி.என்.பி.எல் தொடரில் 11வது லீக் ஆட்டம் நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ் - நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற கோவை அணி கேப்டன் சாரூக் கான் பந்து வீச்சைத் தேர்வு செய்தார்.
இதன்படி நெல்லை அணியில் தொடக்க வீரர்களாக அருண் கார்த்திக் மற்றும் ஹரிஹரன் ஆகியோர் களமிறங்கினர். இதில் ஹரிஹரன் 1 ரன் மட்டுமே எடுத்து பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த ஹரிஷ் 29 ரன்கள் எடுத்து ஆறுதல் அளித்தார். பின்னதாக களமிறங்கிய குருசாமி அஜிதேஷ் 17 ரன்களில் ஆட்டமிழந்தார். ஒருபுறம் விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்த நிலையில் மறுபுறம் நிதானமாக ஆடிய நெல்லை கேப்டன் அருண் கார்த்திக் 2 சிக்ஸர்கள், 5 பவுண்டரி என 47 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
அடுத்ததாக ராஜகோபால் 3 ரன்களிலும், ஈஸ்வரன் 8 ரன்களிலும் ஆட்டமிழக்க, சோனு யாதவ் தனித்து நின்று 26 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து அதிரடி காட்டினார். இறுதியில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்தது. கோவை தரப்பில் ஷாருக் கான், முகமது ஆகியோர் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.