இந்தூர்: ரஞ்சி டிராபி 2023 - 2024 ஆண்டுக்கான போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகின்றன. 32 அணிகள் பங்கேற்றுள்ள இந்த ரஞ்சி டிராபி போட்டியில் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதி வருகின்றன.
இந்த நிலையில், அட்டவனைப்படி கடந்த 9ஆம் தேதி தொடங்கி நடைபெற்ற போட்டிகளில் ஒரு பகுதியாக டி பிரிவில் உள்ள மத்திய பிரதேசம் - பரோடா அணிகளும் மோதி கொண்டன. ஹோல்கர் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் மத்திய பிரதேச அணி பேட்டிங் செய்தது.
தனது முதல் இன்னிங்ஸில் மத்திய பிரதேச அணி 129.3 ஓவர்கள் முடிவில் 454 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஹிமான்ஷு மந்திரி 111 ரன்களும், சரண்ஷ் ஜெயின் 70 ரன்களும் எடுத்தனர். ஆனால் அதன்பின் களம் இறங்கி விளையாடிய பரோடா அணி 132 ரன்களுக்கே ஆல் அவுட் ஆனது. மிதேஷ் படேல் 80 ரன்கள் எடுத்தார்.
அதனைத் தொடர்ந்து 322 ரன்கள் பின்னிதங்கிய நிலையில் பரோடா அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. இருப்பினும் பரோடா அணியால் பெரிதாக சோபிக்கவில்லை. 270 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் மத்திய பிரதேச அணி இன்னிங்ஸ் மற்றும் 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மத்திய பிரதேச அணி சார்பாக குல்வந்த் கெஜ்ரோலியா முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட்களையும், இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்களையும் எடுத்து அசத்தினார். குறிப்பாக இவர் ஒரே ஓவரில் தொடர்ந்து 4 விக்கெட்களை கைப்பற்றினார். இதன் மூலம் முதல் தர கிரிக்கெட்டில் 4 பந்துகளில் 4 விக்கெட்களை வீழ்த்திய மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமையை குல்வந்த் கெஜ்ரோலியா பெற்றுள்ளார்.