சென்னை:ஹங்கேரியில் நடைபெற்ற 45வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய ஆடவர் அணி, மகளிர் அணி ஆகிய 2 அணிகளும் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளது.
குகேஷ், பிரக்ஞானந்தா, ஹரி கிருஷ்ணா, விதித் குஜ்ராத்தி மற்றும் அர்ஜுன் எரிகைசி ஆகியோர் அடங்கிய இந்திய அணி ஓபன் பிரிவிலும், திவ்யா தேஷ்முக், வந்திகா அகர்வால், டானியா சச்தேவ் மற்றும் அபிஜித் குண்டே டி.ஹரிகா, வைஷாலி மற்றும் திவ்யா தேஷ்முக் ஆகியோர் மகளிர் பிரிவிலும் தங்கம் வென்று அசத்தியுள்ளனர்.
டி.குகேஷ் செய்தியாளர் சந்திப்பு (Credits - ETV Bharat Tamil Nadu) தாயகம் திரும்பிய தங்க மகன்:இதனையடுத்து ஹங்கேரியில் இருந்து விமானம் மூலம் அணியின் நம்பிக்கை நட்சத்திர வீரர் கிராண்ட் மாஸ்டர் குகேஷ், சென்னை விமானநிலையம் வந்தடைந்தார். அவருக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்தத் தொடரில் நாங்கள் அனைவரும் நல்ல ஃபார்மில் இருந்தோம். முதல் 3 சுற்றுகளின் முடிவிலேயே அது தெளிவாக தெரிந்துவிட்டது. நடப்பு உலக சாம்பியன் சீனாவைச் சேர்ந்த டிங் லைரின் என்னோடு விளையாடுவார் என்று எதிர்பார்த்தேன்.
அவர் வரவில்லை என்றாலும், மாற்று வீரருக்கும் தயாராக இருந்தேன். என்னை முதல் போர்டில் விளையாட வைத்தது கேப்டன் ஶ்ரீநாத் வியூகம், அதனால் தான் தொடர்ந்து நானும், எரிகேசியும் வெற்றி பெற முடிந்தது. சென்னையில் நடைபெற்ற கடந்த செஸ் ஒலிம்பியாட்டில் கடைசி சுற்றுப் போட்டிகளில் கோட்டைவிட்டோம்.
அந்த நிலைமையை உணர்ந்து இம்முறை அமெரிக்காவுடன் வெற்றியை நோக்கி விளையாடினோம். அதனால் தான் அமெரிக்காவை வீழ்த்த முடிந்தது. ஆண்கள், பெண்கள் என இரண்டிலும் தங்கப்பதக்கம் வென்றுள்ளது சிறப்பான தருணம். ஒலிம்பியாட் போட்டிகளில் அதிக முறை தோல்விகளைச் சந்தித்திருக்கிறோம். சென்னையில் நடந்த போட்டியிலும் தோல்வியைச் சந்தித்துள்ளோம்.
தனிநபர் போட்டியில் தங்கம் வென்றது கூடுதல் மகிழ்ச்சி. ஆண்கள் மற்றும் பெண்கள் என இரண்டு பிரிவிலும் தொடர்ந்து பல பயிற்சிகளையும், முயற்சிகளையும் செய்து வருகிறோம். அதன் விளைவாகத்தான் தற்போது தங்கம் வெல்ல முடிந்தது. மேலும், இது இந்திய அணியின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகும் என தெரிவித்தார்.
இதையும் படிங்க:சென்னை திரும்பிய செஸ் ஒலிம்பியாட் தங்க நட்சத்திரங்கள்.. வீரர்கள் உற்சாக பகிர்வு!