ஐதராபாத்: 2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் மெகா ஏலம் வரும் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரியாத், துபாய், வியன்னா, சிங்கப்பூர் உள்ளிட்ட நகரங்களில் ஐபிஎல் மெகா ஏலத்தை நடத்த ஆலோசித்து வந்த நிலையில், திடீரென ஜெட்டா நகரில் நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் ஏலம் எங்கு?:
ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கும் ஒரு முறை ஐபிஎல் மெகா ஏலம் நடத்தப்படுகிறது. அதன்படி 2025ஆம் ஆண்டு ஐபிஎல் மெகா ஏலம் இந்த மாதம் சவுதி அரேபியாவில் நடைபெறுகிறது. இந்த முறை மெகா ஏலம் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது. ஏனென்றால் 2008க்கு பின் ஏராளமான நட்சத்திர வீரர்கள் மீண்டும் ஏலத்திற்கு வந்துள்ளனர்.
ரிஷப் பண்ட், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ், இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் ஐயர் என்று இந்திய அணிக்காக விளையாடி வரும் வீரர்களும் இந்த முறை ஏலத்தில் பங்கேற்க உள்ளனர். இதனால் மெகா ஏலத்தில் எந்த வீரர் எந்த அணியால் வாங்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.
எத்தனை வீரர்கள் பங்கேற்பு?:
ஜெட்டா நகரில் உள்ள அபாடி அல் ஜோஹர் அரேனாவில் ஐபிஎல் மெகா ஏலம் நடக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஏலத்திற்கு மொத்தம் 1,165 இந்திய வீரர்களும், 409 வெளிநாட்டு வீரர்கள் என மொத்தம் ஆயிரத்து 574 வீரர்கள் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 48 இந்திய வீரர்கள் உள்பட 320 வீரர்கள் சர்வதேச போட்டியில் விளையாடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு அணியிலும் அதிகபட்சமாக 25 வீரர்கள் வரை சேர்க்கலாம். 10 அணிகளும் தக்கவைத்துள்ள வீரர்கள் தவிர இன்னும் 204 இடங்களை ஏலத்தின் மூலம் நிரப்ப வேண்டி உள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக கடந்த அக்டோபர் 31ஆம் தேதி மொத்தம் உள்ள 10 அணிகளும் தங்கள் அணிகளில் தக்கவைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை வெளியிட்டது.
தக்கவைப்பு வீரர்கள் எத்தனை பேர்?:
அதிகபட்சமாக 10 அணிகளில் சேர்த்து மொத்தம் 47 வீரர்கள் வரை தக்கவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சென்னை அணியில் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, இலங்கையை சேர்ந்த மதீஷ பத்திரனா, எம்.எஸ் தோனி ஆகியோர் தக்கவைக்கப்பட்டுள்ளனர்.
எந்த ஐபிஎல் தொடரிலும் இல்லாத வகையில் இந்த முறை முக்கிய வீரர்கள் அணிகளில் இருந்து கழற்றிவிடப்பட்டுள்ளனர். 2024 ஐபிஎல் சீசனை வென்று தந்த ஸ்ரேயாஸ் ஐயரை கொல்கத்தா அணி விடுவித்தது. அதேபோல் பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் சாம் கர்ரன், டெல்லி கேபிட்டல்ஸ் கேப்டன் ரிஷப் பன்ட், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் கேப்டன் கே.எல்.ராகுல் ஆகியோரும் அணிகளில் இருந்து கழற்றிவிடப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க:பாலினத்தை மறைத்து பதக்கம் வென்றாரா இமானே கெலிப்! மருத்துவ அறிக்கையில் அதிர்ச்சி தகவல்! பதக்கம் திரும்பப் பெறப்படுமா?