கபா:இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் உள்ள காபா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் நாள் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. இதன் காரணமாக இரண்டாவது நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) அரைமணி நேரம் முன்னதாகவே போட்டி தொடங்கியது.
விறுவிறுப்பாக தொடங்கிய 2வது நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி வீரர்கள் ஆரம்பத்தில் சற்று தடுமாறினார்கள். ஓபனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கிய உஸ்மான் கவாஜா 21 ரன்களுக்கு, நாதன் மெக்ஸ்வீனி 9 ரன்களுக்கு பும்ரா பந்து வீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
அதன் பிறகு லபுஷேன் விக்கெட்டை நிதிஷ் குமார் ரெட்டி வீழ்த்த, 75 ரன்களுக்குள் அந்த அணி 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனையடுத்து 4வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த டிராவிஸ் ஹெட் மற்றும் ஸ்மித் ஆகிய இருவரும் பொறுப்பாக விளையாடினர்.
மேலும் சரிவிலிருந்த ஆஸ்திரேலிய அணியை அடுத்தடுத்த சதத்தின் மூலம் மீட்டனர். இருவரை அவுட்டாக்க இந்திய பந்து வீச்சாளர்கள் பல்வேறு முயற்சிகள் செய்தும் பலனளிக்கவில்லை. இதன் பின்னர் புதிய பந்து அறிமுகப்பட்ட சிறிது நேரத்திலேயே பும்ராவின் துல்லியமான பந்து வீச்சில், ஸ்மித் 102 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
பும்ரா சாதனை:அடுத்த வந்த மிட்செல் மார்ஷ் மற்றும் வலுவான நிலையில் இருந்த டிராவிஸ் ஹெட்(152 ரன்) ஆகிய இருவரின் விக்கெட்டையும் ஒரே ஓவரில் வீழ்த்தி அசத்தினார் பும்ரா. இதன் மூலம் 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய பும்ரா, புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
அதாவது SENA எனப்படும் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு எதிராக 8வது முறையாக 5 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். இதில் மூன்று முறை தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராகவும், இரண்டு முறை இங்கிலாந்திற்கு எதிராக ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இதையும் படிங்க:"குகேஷ்-க்கு ரூ.5 கோடி ரொக்கப் பரிசு" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
இதற்கு முன்னதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் 7 முறை 5 விக்கெட்டுகள் எடுத்து இருந்ததே அதிகபட்சமாக இருந்தது. தற்போது அந்த சாதனையை பும்ரா முறியடித்துள்ளார். மேலும் கபில் தேவுக்குப் பிறகு இந்தியாவுக்காக டெஸ்டில் அதிக 5 விக்கெட்டுகளை வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளராகவும் பும்ரா திகழ்கிறார். பும்ரா தற்போது 12 முறை ஐந்து விக்கெட்டுகளையும், கபில்தேவ் 23 முறை ஐந்து விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர். இவர்களுக்கு அடுத்தபடியாக ஜாகீர் கான் மற்றும் பி சந்திரசேகர் உள்ளனர்.