ஐதராபாத்: இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நேற்று (நவ.22) பெர்த் மைதானத்தில் தொடங்கிய நிலையில், டாஸ் வென்று முதல் இன்னிங்சில் களமிறங்கிய இந்திய அணி 150 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது.
இந்திய அணியில் அதிகபட்சமாக நிதிஷ் ரெட்டி (41 ரன்), விக்கெட் கீப்பர் ரிஷப் பன்ட் (37 ரன்) மட்டுமே ரன் குவித்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து முதல் இன்னிங்சில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி இந்திய வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் 104 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
அபாரமாக பந்துவீசிய கேப்டன் பும்ரா 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். ஹர்சீத் ரானா 3 விக்கெட்டும், முகமது சிராஜ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். பும்ரா 5 விக்கெட்கள் வீழ்த்தியதை அடுத்து டெஸ்ட் போட்டியில் அவர் 11வது முறையாக ஒரே இன்னிங்ஸில் ஐந்து விக்கெட் வீழ்த்தி உள்ளார். ஒரே இன்னிங்ஸில் 5 விக்கெட் வீழ்த்துவது டெஸ்ட் கிரிக்கெட்டில் முக்கிய சாதனையாக பார்க்கப்படுகிறது.
அந்த வகையில் 11வது முறையாக 5 விக்கெட் வீழ்த்திய பும்ரா பல்வேறு சாதனைகளை உடைத்து இருக்கிறார். அவர் இதுவரை தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்தியா என ஐந்து நாடுகளில் மொத்தமாக 11 முறை ஒரே இன்னிங்ஸில் 5 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார்.