ஹராரே:ஜிம்பாப்வேயில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நடைபெற்ற 3 மூன்று போட்டிகளில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் இருந்தது.
இந்த நிலையில், 4வது டி20 போட்டி இன்று ஹராரேவில் உள்ள ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப்பில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி, சிகந்தர் ரசா தலைமையிலான ஜிம்பாப்வே அணி பேட்டிங்கில் களம் இறங்கியது. இதில், அதிகபட்சமாக கேப்டன் ரசா மட்டும் அரைசத்தை நெருங்கி 46 ரன்கள் எடுத்த நிலையில் சுப்மன் கில்லிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
மற்றபடி, மதீவிரே 25, டி மருமனி 32 என ரன்கள் எடுத்தனர். இதர வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 20 ஓவர்கள் முடிவில் ஜிம்பாப்வே அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்தது. இதில் கலீல் அகமது 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும், வாஷிங்டன் சுந்தர். ஷிவம் துபே உள்ளிட்டோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.