சென்னை:நடப்பு ஐபிஎல் (IPL 2024) தொடரின் 49வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) - பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணியை எதிர் கொண்டது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் சாம் கரன் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி, முதலில் களமிறங்கிய சென்னை அணி - பஞ்சாப் வீரர்களின் பந்து வீச்சை எதிர் கொள்ள முடியாமல் திணறியது. குறிப்பாக மிடில் ஓவர்களில் சிஎஸ்கே அணியால் ரன்களை குவிக்க முடியாமல் போனது. இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் மட்டுமே எடுத்தது சிஎஸ்கே.
பொறுப்புடன் விளையாடிய சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் 48 பந்துகளில் 2 சிக்ஸர்கள் 5 பவுண்டரிகள் என 62 ரன்கள் குவித்தார். பஞ்சாப் அணி தரப்பில் ராகுல் சாஹர் மற்று ஹர்ப்ரீத் பிரார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அதன் பின்னர், 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது பஞ்சாப் கிங்ஸ்.
பிரப்சிம்ரன் மற்றும் ஜானி பேர்ஸ்டோ ஆகியோர் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக களமிறங்கினர். இதில் 15 ரன்கள் எடுத்து இருந்த பிரப்சிம்ரன், ரிச்சர்ட் கிலீசன் வீசிய பந்தில் ருதுராஜ் கெய்க்வாட்டிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து களமிறங்கிய ரிலீ ரோசோவ் - பேர்ஸ்டோவுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் இணைந்து சிஎஸ்கே பந்துவீச்சை அடித்து நொறுக்கினர். சென்னை கேப்டன் ருதுராஜ் அனைத்து பவுலர்களையும் பயன்படுத்திப் பார்த்தார். ஆனால் யாருடைய பந்து வீச்சும் எடுபடவில்லை.