முல்லன்பூர்:நடப்பு ஐபிஎல் தொடரின் 37-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸை எதிர் கொண்டது. சண்டிகரில் உள்ள முல்லன்பூர் மைதானத்தில் நேற்று (ஏப்ரல் 21) நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற சாம் கரன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அதன் படி முதலில் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் -குஜராத் அணியின் பந்து வீச்சில் ரன்களை சேர்க்க முடியாமல் திணறியது. இதனால், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 146 மட்டுமே அந்த அணியால் சேர்க்க முடிந்தது.
அதிகபட்சமாக பிரப்சிம்ரன் 35 ரன்களும், ஹர்ப்ரீத் பிரார் 29 ரன்களும் குவித்தனர். சிறப்பாக பந்து வீசிய தமிழகத்தைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் சாய் கிஷோர் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதனையடுத்து 147 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ், ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக விருத்திமான் சாஹா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் களம் இறங்கினர்.
போட்டியின் 3.4 ஓவரின் போது அர்ஷ்தீப் சிங் வீசிய பந்தில் 13 ரன்கள் எடுத்து இருந்த விருத்திமான் சாஹா தன்னுடைய விக்கெட்டை இழந்தார். இதன் பின்னர் கேப்டன் சுப்மன் கில்வுடன் கைகோர்த்த சாய் சுதர்சன் ஜோடி அணியின் ஸ்கோரை நிதனமாக உயர்த்தினர்.