ஹைதராபாத்:நடப்பு ஐபிஎல் தொடரின் 18வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - சென்னை சூப்பர்ஸ் கிங்ஸ் அணியை எதிர்கொண்டது. ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி மைதானத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி, முதலில் களமிறங்கிய சென்னை அணி - ஹைதராபாத் அணியின் பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. இருப்பினும் ஷிவன் துபே மற்றும் ரஹானே பார்ட்னர்ஷிப் காரணமாக 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் சேர்த்தது.
அதிரடியாக விளையாடிய ஷிவம் துபே 45 ரன்களும், பொறுப்புடன் விளையாடிய ரஹானே(35), ஜடேஜா 31 ரன்களும் குவித்தனர். இதனையடுத்து 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணி சென்னை அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தது.
போட்டியின் முதல் ஓவரில் 8 ரன்கள் மட்டும் சேர்த்து இருந்தது. இதனையடுத்து இம்பேக்ட் பிளேயராக களமிறங்கிய முகேஷ் சௌத்ரி 2வது ஓவரை வீச, பாரபட்சம் பார்க்காமல் வெளுத்து வாங்கினார், அபிஷேக் சர்மா. அந்த ஓவரில் மட்டும் 3 சிக்ஸர்கள் 2 பவுண்டரிகள் ஒரு நோ பால் என மொத்தம் 27 ரன்கள். இதனையடுத்து போட்டியின் மூன்றாவது ஓவரில் அதிரடியாக விளையாடிக் கொண்டு இருந்த அபிஷேக் சர்மா 37 ரன்களுக்கு வெளியேறினார்.
இதனையடுத்து களமிறங்கிய மார்க்ரம் தொடக்க வீரர் ஹெட் உடன் இணைந்து பொறுப்பாக விளையாடினார். இதில் சிறப்பாக விளையாடிய மார்க்ரம் அரைசதம் விளாசினார். இதனால் 18.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு இலக்கை எட்டியது ஹைதராபாத்.
ஹென்றி கிளாசன் 10 ரன்களுடனும், நிதிஷ் ரெட்டி 14 ரன்களுடனுன் களத்தில் இருந்தனர். இதன் மூலம் 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி நடப்பு ஐபிஎல் தொடரில் 2வது வெற்றியைப் பதிவு செய்த ஹைதராபாத் அணி, புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தை பிடித்துள்ளது. இன்று நடைபெறும் (சனிக்கிழமை) 19வது லீக் போட்டியில் புள்ளி பட்டியலில் 2வது இடத்தில் உள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 8 வது இடத்தில் உள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது.
இதையும் படிங்க:MI vs DC: கம்பேக் கொடுக்கும் சூர்யகுமார் யாதவ்! மும்பை ஆட்டம் இனி எப்படி இருக்கும்? - Suryakumar Yadav