பெங்களூரு:17வது ஐபிஎல் லீக் தொடரின் 10வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர் கொண்டது. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
அதன்படி, முதலில் களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 182 ரன்கள் சேர்த்தது. இறுதிவரை களத்தில் நின்று அதிரடியாக விளையாடிய விராட் கோலி 59 பந்துகளில் 4 பவுண்டரி 4 சிக்ஸர்கள் உட்பட 83 ரன்கள் குவித்திருந்தார். இறுதியில் களமிறங்கிய தினேஷ் கார்திக் தன்னுடய பங்கிற்கு 3 சிக்ஸர்கள் விளாசினார். பின்னர், 20 ரன்களுக்கு அவுட் ஆனார்.
இதனையடுத்து 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணியின் வீரர்கள் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அந்த அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கிய சுனில் நரேன், பெங்களூரு அணியின் பந்து வீச்சை வெளுத்து வாங்கினார். இதனால் பவர்பிளே முடிவில் விக்கெட் இழப்பின்றி 85 ரன்கள் குவித்தது.
அதிரடியாக விளையாடிக் கொண்டு இருந்த நரேன், மயங்க் தாகர் வீசிய பந்தில் அவுட் ஆகி வெளியேறினார். 22 பந்துகளை எதிர்கொண்ட அவர் 5 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் உட்பட 47 ரன்கள் விளாசினார். இதனைத் தொடர்ந்து மற்றொரு ஓப்பனிங் பேட்ஸ்மேன் பிலிப் சால்ட் 30 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்வுடன் ஜோடி சேர்ந்த வெங்கடேஷ் ஐயர், அரைசதம் விளாசி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். இதனால், கொல்கத்தா அணி 16.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஸ்ரேயாஸ் 30 ரன்களுடனும் ரிங்கு சிங் 5 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இந்த போட்டியில் நடந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகள் இதோ!
- இரண்டாவதாக பேட்டிங் செய்த கேகேஆர் அணி பவர் பிளேவில் முடிவில் 85 ரன்கள் குவித்தது. இது நடப்பு சீசனில் பவர் பிளேவில் அடிக்கப்பட்ட அதிக ரன்னாகும்.
- 2016 ஆம் ஆண்டுக்குப் பிறகு பெங்களூரு அணி அதன் சொந்த மைதானத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தியதே கிடையாது. இந்த முறையும் அது தொடர்கிறது.
- கேகேஆர் அணியின் சுழல் நாயகன் சுனில் நரேனுக்கு இந்த போட்டி 500வது டி20 போட்டியாகும். இந்த போட்டியில் அவர் ஆட்டநாயகன் விருது வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஐபிஎல் வரலாற்றில் அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட (24.75 கோடி) மிட்செல் ஸ்டார்க் இதுவரை விளையாடிய 2 போட்டிகளில் 8 ஓவர்கள் வீசி 100 ரன்களை வாரி வழங்கியுள்ளார்.
- நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை நடைபெற்ற போட்டிகளில் சொந்த மைதானத்தில் தோல்வியை தழுவிய முதல் அணி என்ற அணி என்ற நிலைக்கு ஆளாகியுள்ளது, ஆர்சிபி.
இதையும் படிங்க:ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை படைத்த டேவிட் வார்னர்! - David Warner IPL Records