சென்னை:17வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்த தொடரில் கொல்கத்தா அணி 20 புள்ளிகளுடன் முதல் இடத்தையும் ஹைதராபாத் அணி 17 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தையும் புள்ளிப்பட்டியலில் பிடித்திருந்தன. குவாலிஃபையர் சுற்றின் முதல் ஆட்டத்தில் கொல்கத்தா அணியிடம் வீழ்ந்த ஹைதராபாத் அணி, எலிமினேட்டர் போட்டியில் வென்று, குவாலிஃபையர் இரண்டாம் ஆட்டத்திற்கு வந்த ராஜஸ்தான் அணியை வீழ்த்தி ஃபைனலுக்கு முன்னேறி இருக்கிறது. கொல்கத்தா அணி குவாலிபயர் முதல் ஆட்டத்தில் பெற்ற வெற்றியின் மூலம் நேரடியாக இறுதிப்போட்டிக்கு நுழைந்தது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் : சுனில் நரைன் பவர்ப்ளே ஓவர்களில் அதிரடி காட்டுகிறார். வெங்கடேஷ் ஐயர், ஷ்ரேயாஸ் ஐயர், ரமன்தீப் சிங் ஆகிய பேட்ஸ்மேன்கள் மிடில் ஓவர்களுக்கு பலம் சேர்கின்றனர். ரிங்கு சிங், ஆண்ட்ரே ரஸல் ஆகியோர் இறுதி ஓவர்களில் ரன் குவிக்க உதவுகின்றனர்.பவுலிங்கை பொருத்தவரை மிட்செல் ஸ்டார்க் தனது வேகத்தின் மூலம் எதிரணிக்கு அச்சுறுத்தல் தருகிறார். சுனில் நரைன் மற்றும் வருண் சக்ரவர்த்தி சுழல் ஜாலத்தின் மூலம் அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவுகின்றனர்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் :டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா ஆகியோர் அணிக்கு அட்டகாசமான தொடக்கத்தை தருகின்றனர். 'கடப்பாரை கிளாசென்' அணிக்கு நல்ல பங்களிப்பினை அளித்து வருகிறார். நிதிஷ் குமார் ரெட்டி, அப்துல் சமத், ஷாபாஸ் அகமது ஆகியோர் தன் பங்குக்கு அசத்தி வருகின்றனர்.பவுலிங்கை பொருத்தவரை பேட் கம்மின்ஸ், புவனேஷ்வர் குமார், உனத்கட் ஆகியோர் தங்களது வேகத்தின் மூலம் விக்கெட்டுகளை சாய்கின்றனர். நடராஜன் தனது யார்க்கரின் மூலம் பேட்ஸ்மேன்களை திணறடிக்கிறார்.
சாம்பியன் ஆகப்போவது யார்?:கொல்கத்தா அணி 2012 மற்றும் 2014 ஆண்டுகளில் இருமுறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.ஹைதராபாத் அணி 2016ல் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.இதனிடையே மீண்டும் சாம்பியன் பட்டத்தை வெல்லக்கூடிய அணி யார் என்பதை முடிவு செய்யும் போட்டியாக இன்றைய ஆட்டம் அமைந்துள்ளது.