சென்னை:தென்னாப்பிரிக்கா மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 தொடர்கள் கொண்ட டி20 போட்டியில் விளையாடி வருகிறது. அதன்படி, 3வது டி20 தொடர் இன்று மாலை 7 மணிக்கு சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, லாரா - டாஸ்மின் ஜோடி களமிறங்கியது. முதல் ஓவரிலே டாஸ்மின் தனது பவுண்டரியை விளாசினார்.
2வது ஓவரில் லாரா அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி அணிக்கு ரன்களைக் குவிக்க முற்படும் போது ஸ்ரேயங்கா பாட்டீல் வீசிய பந்தை சமாளிக்க முடியாமல் ஆட்டமிழக்க, மரிசான் கேப் களம் கண்டார். அவரும் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்ப அன்னேக் போஷ் களம் கண்டார்.
சிறப்பாக விளையாடிய டாஸ்மின், தீப்தி ஷர்மா வீசிய பந்தில் அவுட் ஆனார். அடுத்தடுத்து வந்த வீராங்கனைகள் சொற்ப ரன்னில் அவுட் ஆக 17.1 ஓவர்கள் முடிவிற்கு தென்னாப்பிரிக்கா மகளிர் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 84 ரன்கள் எடுத்திருந்தது.
85 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய மகளிர் அணியின் தொடக்க வீரர்களாக ஸ்மிருதி மந்தனா - ஷஃபாலி வர்மா ஜோடி களமிறங்கியது. முதல் ஓவரிலே ஸ்மிருதி மந்தனா அடுத்தடுத்து இரு பவுண்டரிகளை விளாசினார். அடுத்த 4 ஓவர்களுக்கு பவுண்டரிகள் எதுவும் கிடைக்காமல் அணி திணறியது.
5வது ஓவரில் ஷஃபாலி வர்மா இரு பவுண்டரிகளை விளாசி அணிக்கு ரன்களைச் சேர்க்க அடுத்தடுத்து ஒவ்வொரு ஓவரிலும் இந்திய அணிக்கு இரு பவுண்டரிகள் கிடைத்தன. 11வது ஓவரில் அடுத்தடுத்து பவுண்டரிகள், சிக்ஸ் என மாறி மாறி ஸ்மிருதி மந்தனா விளாசி, இந்திய மகளிர் அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.
இப்போட்டியில் ஸ்மிருதி மந்தனா 54 ரன்களையும், ஷஃபாலி வர்மா 27 ரன்களையும், பூதா வஸ்தகர் 4 விக்கெட்டுகளையும், ராதா யாதவ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர். மேலும், அருந்ததி ரெட்டி, ஸ்ரேங்கயா பாட்டீல், தீப்தி ஷர்மா தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர். இந்த டி20 தொடரானது 1-1 என்ற கணக்கில் முடிவடைந்தது.
இதையும் படிங்க:இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக கெளதம் கம்பீர் நியமனம்! - GAUTAM GAMBHIR INDIA HEAD COACH