சென்னை: தென் ஆப்பிரிக்க மகளிர் அணி இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு தலா 3 போட்டிகள் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட், ஒரேயொரு டெஸ்ட் கிரிக்கெட் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரை 3-க்கு 0 என்ற கணக்கில் வீழ்த்தி தென் ஆப்பிரிக்க மகளிர் அணியை இந்திய மகளிர் ஒயிட் வாஷ் செய்தனர்.
இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான ஒரேயொரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று (ஜூன்.28) தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய மகளிர் அணியின் கேப்டன் ஹர்மன் பிரீத் கவுர் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணி முதல் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 525 ரன்கள் குவித்தது.
தொடக்க வீராங்கனை ஷபாலி வர்மா (205 ரன்) அபாரமாக விளையாடி இரட்டை சதம் விளாசினார். அதேபோல் மற்றொரு தொடக்க வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா 149 ரன்கள் குவித்தார். இருவரும் இணைந்து தொடக்க விக்கெட்டுக்கு 292 ரன்கள் குவித்தனர். இதன் ஒட்டுமொத்த மகளிர் கிரிக்கெட்டில் முதல் விக்கெட்டுக்கு அதிகபட்ச ரன் குவித்த ஜோடி என சாதனை படைத்தனர்.
அதுமட்டுமின்றி ஒரு விக்கெட் பார்டனர்ஷிப்பில் குவிக்கப்பட்ட இரண்டாவது அதிகபட்சமாக இந்த ரன் அமைந்தது. தொடர்ந்து இன்று இரண்டாவது நாளில் இந்திய மகளிர் அணி 6 விக்கெட் இழப்புக்கு 602 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. கடைசி கட்டத்தில் கேப்டன் ஹர்மன் பிரீத் கவுர் 69 ரன்களும், ரிச்சா கோஷ் 86 ரன்களும் குவித்தனர்.