மும்பை : 2023-24 ஆண்டுக்கான இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரின் பிளே ஆப் மற்றும் இறுதிப் போட்டிக்கான அட்டவணை வெளியாகி உள்ளது. இந்த மாதத்தில் ஐஎல்எல் கால்பந்து தொடரின் பிளே ஆப் மற்றும் இறுதிப் போட்டிகள் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஏப்ரல் 19ஆம் தேதி முதல் நாக் அவுட் மற்றும் அரை இறுதிச் சுற்றுக்கான போட்டிள் தொடங்க உள்ளதாகவும் மே 4ஆம் தேதி நடப்பு சீசனுக்கான இறுதிப் போட்டி நடைபெற உள்ளதாகவும் ஐஎஸ்எல் நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டு உள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டு உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், லீக் சுற்று முடிவில் புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக அரை இறுதிக்கு தகுதி பெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் புள்ளிப் பட்டியலில் மூன்றில் இருந்து 6வது இடத்தில் இடம் பிடிக்கும் அணிகள் இடையே நாக் அவுட் சுற்றுகள் நடத்தப்பட்டு அதில் இருந்து மற்ற இரண்டு அரைஇறுதி அணிகள் தேர்வு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அரைஇறுதி சுற்றுகள் முடிவில் இரண்டு அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று மே 4ஆம் தேதி சாம்பியான் யார் என நிர்ணயிக்கும் ஆட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஏறத்தாழ 5 அணிகள் ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டன. மும்பை சிட்டி எப்சி, மோகன் பாகன், ஒடிசா எப்சி, எப்சி கோவா, கேரளா பிளாஸ்டர்ஸ் எப்சி ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டன. கடைசியாக சென்னையின் எப்சி அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.
பஞ்சாப் எப்சி அணியிடன் கிழக்கு பெங்கால் எப்சி அணி தோல்வி அடைந்ததை அடுத்து சென்னையின் எப்சி அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.