பாரீஸ்:பாரீஸ் ஒலிம்பிக் விளையாட்டு திருவிழா கடந்த மாதம் ஜூலை 26ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இந்தியா இதுவரை 3 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது. அனைத்து வெண்கலப் பதுக்கங்களுமே துப்பாக்கி சுடுதல் போட்டியின் மூலம் இந்தியாவுக்கு கிடைத்துள்ளது.
இந்நிலையில் பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் ஜூலை 31ஆம் தேதி நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டன் போட்டியில் அரையிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெறும் ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பிவி சிந்து, எஸ்தோனியா வீராங்கனை கிறிஸ்டின் குபாவை எதிகொண்டார். இந்த போட்டியில் பிவி சிந்து 21-5, 21-10 என்ற நேர் செட் கணக்கில் வெற்று பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இதற்கு முந்தைய சுற்றில் அவர் மாலத்தீவு வீராங்கனை பாத்திமா நபாஹாவை 21-9, 21-9 என்ற நேர் செட்டில் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து நேற்று நடைபெற்ற பாரீஸ் ஒலிம்பிக் 6ஆவது நாள் போட்டிகளில் மகளிர் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டன் எலிமினேட்டர் சுற்று நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய வீராங்கனை பிவி சிந்து சீனாவின் ஹி பிங்க்ஜியோவுடன் மோதினார். இந்த ஆட்டத்தில் முதல் செட்டை 19-21 என்ற கணக்கில் பிவி சிந்து இழந்தார். இதனையடுத்து 2 ஆவது செட்டையும் 14-21 என்ற கணக்கில் இழந்து தோல்வியை தழுவினார்.