உடையாபட்டி:சேலம் மாவட்டம் உடையாபட்டி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் விளையாட்டு விழா நடைபெற்றது. இதனை இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் கலந்து கொண்டு துவக்கி வைத்தார். தொடர்ந்து மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு பல்வேறு விளையாட்டுப் போட்டிகளையும் துவக்கி வைத்தார்.
தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பதக்கம் மற்றும் சான்றுகளை கிரிக்கெட் வீரர் நடராஜன் வழங்கினார். அப்போது நடராஜன் பேசுகையில், "எந்த விஷயத்தையும் தடையாக நினைக்க கூடாது. ஒரு வருஷம் என்னால் விளையாட முடியவில்லை. இப்பொழுது தான் வாழ்க்கை தொடங்கியது ஆனால் அதற்குள் என்னுடைய வாழ்க்கை இப்படி ஆனதால் எனக்கு மிகப் பெரிய மன உளைச்சல் ஏற்பட்டது.
நல்ல நண்பர்கள், நல்ல மனிதர்கள் எப்பொழுதும் என்னை சுற்றி கிடைத்தார்கள். நான் செய்கின்ற கடினமான உழைப்பு கடவுள் கொடுத்த வரம். தன்னம்பிக்கையோடு போராடியதால் எங்கெல்லாம் நான் துவண்டு போகிறேனோ அங்கெல்லாம் என்னை தோள் கொடுத்து தூக்கியவர்கள் நண்பர்கள் மற்றும் உடன் இருந்தவர்கள் தான்.
சில பேருக்கு பாடல் கேட்பது பிடிக்கும், ஒரு சிலருக்கு தனிமையில் அமர்ந்திருப்பது பிடிக்கும், ஆனால் எனக்கு சில நபர்களை ஊக்கப்படுத்துதல் பிடிக்கும். வாழ்க்கையில், அதிக அளவில் கஷ்டப்பட்டு உள்ளேன். பேருந்தில் செல்ல கூட என்னிடம் பணம் இருக்காது. விளையாடி விளையாட்டின் மூலம் வரும் பணத்தில் தான் கல்லூரி படிப்பை முடித்தேன்.
அனைவருக்கும் ஒரு திறமை உள்ளது. எனக்கு தெரிந்து நிறைய நபர்கள் தற்பொழுது விளையாட்டில் சாதித்துள்ளனர். ஆனால் நகர வாழ்க்கைக்கு சென்றவுடன் அவர்களுடைய வாழ்க்கை தரம் மாறி விடுகிறது. உங்களுக்குப் பிடித்த துறையை தேர்ந்தெடுங்கள். விளையாட்டுத்துறை அல்ல எந்தத் துறையை தேர்ந்தெடுத்தாலும் சாதிக்கலாம்.
அதற்கு நீங்கள் ஓட வேண்டும், இடையில் ஆயிரம் தடைகள் வந்தாலும் உங்களுடைய இலக்கை நோக்கி ஓட வேண்டும். கிராமத்தில் நிறைய சொல்லுவார்கள், விளையாட்டில் என்ன இருக்கு போய் குடும்பத்தை காப்பாற்று என்று, என்னிடம் கூட அப்படி சொல்லி இருந்தார்கள். கிராமப் புறத்தில் யாரும் ஊக்கப்படுத்த மாட்டார்கள்.
தற்போது, விளையாட்டு துறையில் பல்வேறு வாய்ப்புகள் வந்துள்ளன. இப்பொழுது இருக்கும் மாணவர்கள் அதை பயன்படுத்துவதில்லை, காரணம் தற்போது காலநிலை மாறிவிட்டது. முந்தைய காலத்தில் பள்ளி முடிந்து சென்றவுடன் எங்கு மைதானம் உள்ளது என்று தேடி சென்று விளையாடுவார்கள்.