துபாய்:ஐசிசி சார்பில் மகளிருக்கான 9வது 'டி-20' உலகக் கோப்பை தொடர், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் குரூப்-ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீச்சை நடத்தின. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் பாத்திமா சனா பேட்டிங்கை தேர்வு செய்தார்.
106 ரன்களில் சுருண்ட பாகிஸ்தான்:அதன்படி முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, இந்தியாவின் பந்து வீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் தடுமாறியது. அந்த அணியில் நிதா தர் 28 ரன்கள், முனீபா அலி 17 ரன்கள், சையதா அரூப் ஷா 14 ரன், கேப்டன் பாத்திமா சனா 13 ரன்களை தவிர மற்ற யாரும் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு பாகிஸ்தான் அணியால் 105 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது. இந்திய அணி தரப்பில் சிறப்பாக பந்து வீசிய அருந்ததி ரெட்டி 3 விக்கெட்டுகளையும், ஸ்ரேயங்கா பாட்டீல் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். அதேபோல் ரேணுகா, ஆஷா சோபனா மற்றும் தீப்தி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி:இதனையடுத்து 106 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 18.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 108 ரன்களை குவித்தது. இதன் மூலம் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி, அபார வெற்றி பெற்றது.