சென்னை:இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் 4வது நாள் ஆட்டம், இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. 515 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் 2வது இன்னிங்ஸைத் தொடங்கிய வங்கதேச அணி, இந்தியாவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 234 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுளையும் இழந்தது.
இதனால் 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா, தொடரை 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி, 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது.
இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி கடந்த வியாழக்கிழமை, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, அஸ்வினின் சதம் மற்றும் ஜடேஜாவின் அசத்தலான பேட்டிங் ஆகியவற்றால் 376 ரன்கள் குவித்தது.
வங்கதேச அணியின் இளம் பந்துவீச்சாளர் ஹசன் மஹ்மூத் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். இதனையடுத்து, முதல் இன்னிங்ஸை தொடங்கிய வங்கதேச அணி, இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 149 ரன்ளுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.