சென்னை:தென் ஆப்பிரிக்க மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தலா 3 போட்டிகள் கொண்டு ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடர் மற்றும் ஒரேயொரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகின்றனர். இதில் முதலில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய மகளிர் அணி 3-க்கும் 0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றி தென் ஆப்பிரிக்க மகளிரை ஒயிட் வாஷ் செய்தனர்.
தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையிலான ஒரேயொரு டெஸ்ட் போட்டி தொடர் சென்னையில் கடந்த ஜூன் 28ஆம் தேதி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்மன் பிரீத் கவுர் பேட்டிங்கை தேர்வு செய்தார். முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 603 ரன்களை எடுத்தது.
தொடக்க வீராங்கனை ஷபாலி வர்மா 205 ரன்கள் குவித்து அசத்தினார். மற்றொரு தொடக்க வீராங்கனை ஸ்மிரிதி மந்தனாவும் 149 ரன்கள் குவித்தார். இந்திய வீராங்கனைகளின் அபார பேட்டிங் திறமையால் தென் ஆப்பிரிக்காவுக்கு 604 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. தொடர்ந்து முதல் இன்னிங்சில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா பெரிய அளவில் யாரும் சோபிக்கவில்லை.
இந்திய வீராங்கனைகளின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து சொற்ப ரன்களில் வெளியேறினர். முதன் இன்னிங்சில் தென் ஆப்பிரிக்க மகளிர் 266 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தனர். முதல் இன்னிங்சில் 337 ரன்கள் பின்தங்கிய தென் ஆப்பிரிக்க மகளிர் அணி பாலோ ஆன் ஆனது. இதையடுத்து தென் ஆப்பிரிக்கா வீராங்கனைகள் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சில் விளையாடினர்.