கோலாலம்பூர்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான U19 டி20 உலகக் கோப்பை இறுதி போட்டியில் இந்திய மகளிர் அணி, தென்னாப்பிரிக்காவை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது. கோப்பையை வென்ற இந்திய அணிக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ரூ.5 கோடி ரொக்கப் பரிசு அறிவித்துள்ளது.
ஐசிசியின் 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரானது, ஜனவரி 18-ஆம் தேதி மலேசியாவில் தொடங்கியது. இதன் இறுதிப்போட்டி கோலாலம்பூரில் உள்ள பேயுமாஸ் ஓவலில் இன்று (பிப்ரவரி02) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றுள்ளது.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா மகளிர் அணி, 20 ஓவர்களில் 82 ரன்களில் ஆல் அவுட்டானது. இந்திய ஸ்பின்னர்கள் அசத்தலாக பந்துவீசி 9 விக்கெட்டுகளை கைப்பற்றினர். அபாரமாக பந்து வீசிய கோங்கடி த்ரிஷா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனையடுத்து, 83 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய இந்திய அணி 11.2 ஓவர்களில் ஒரு விக்கெட் மட்டுமே இழந்து, 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் 84 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடர்ந்து 2வது முறையாக இந்தியா சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது.
இதையும் படிங்க:IND vs ENG 5th T20I: இங்கிலாந்து பெளலர்களை கதிகலங்க வைத்த அபிஷேக் சர்மா சாதனை சதம் அடித்து அசத்தல்!
இதில், இந்தியா தரப்பில் அதிகபட்சமாக த்ரிஷா 44 ரன்களும், சானிகா சால்கே 26 ரன்களும் எடுத்து அசத்தினர். போட்டியில் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் சிறப்பாக செயல்பட்ட த்ரிஷா கோங்காடி ஆட்ட நாயகி மற்றும் தொடர் நாயகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) வாழ்த்து தெரிவித்துள்ளது. டி20 உலகக் கோப்பை தொடரின் தலைமை பயிற்சியாளர் நூஷின் அல் காதிர் தலைமையில் வெற்றி பெற்ற இந்திய மகளிர் U19 அணி மற்றும் துணை ஊழியர்களுக்கு ரூ.5 கோடி ரொக்கப் பரிசை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) வெற்றி பெற்ற இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது.