ஐதராபாத் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இங்கிலாந்து அணியின் இன்னிங்சை ஷேக் கிரவ்லே மற்றும் பென் டக்கெட் தொடங்கினர். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் முதல் விக்கெட்டுக்கு 55 ரன்கள் சேர்த்தனர். தமிழக வீரர் அஸ்வின் பந்தில் பென் டக்கெட் எல்பிடபிள்யு முறையில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஓல்லி போப் 1 ரன்னில் நடையை கட்டினார்.
மறுபுறம் மற்றொரு தொடக்க வீரர் ஷேக் கிரவ்லே தனது பங்குக்கு 20 ரன்கள் எடுத்து அதே அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனிடையே இங்கிலாந்து அணியின் நம்பிக்கை நட்சத்திரம் ஜோ ரூட் 29 ரன்களில் ரவீந்திர ஜடேஜா பந்தில் ஆட்டமிழந்தார். இங்கிலாந்து அணியின் முதல் 4 விக்கெட்டுகள் சத்தமே இல்லாமல் இந்திய சுழலில் வீழ்ந்தன.
மறுபுறம் சீரான இடைவெளியில் இங்கிலாந்து அணியில் விக்கெட்டுகள் வீழ்ந்த வண்ணம் இருந்தாலும், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மற்றும் அணியின் ரன் விகிதத்தை உயர்த்த போராடிக் கொண்டு இருந்தார். அவருக்கு உறுதுணையாக பேரிஸ்டோவ் 37 ரன் எடுத்து வெளியேறினார். மற்றபடி இங்கிலாந்து வீரர்கள் யாரும் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு விளையாடவில்லை.
விக்கெட் கீப்பர் பென் போக்ஸ் 4 ரன், ரெஹன் அஹ்மத் 13 ரன் என அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். இறுதியில் ஒற்றை ஆளாக போராடிக் கொண்டு இருந்த பென் ஸ்டோக்ஸ் தன் பங்குக்கு 70 ரன்கள் மட்டும் எடுத்து ஆட்டமிழந்தார். முடிவில் 64 புள்ளி 3 ஓவர்களில் இங்கிலாந்து அணி 246 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல்-அவுட்டானது.
இந்திய அணியில் சுழற்பந்துவீச்சாளர்கள் ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் அக்சர் பட்டேல் 2 விக்கெட்டும், வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். தொடர்ந்து இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் முதல் இன்னிங்சில் விளையாடி வருகின்றனர்.
இதையும் படிங்க : இந்தியா Vs இங்கிலாந்து முதல் டெஸ்ட்; டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு!