ராஜ்கோட்:இங்கிலாந்து - இந்தியா இடையேயான 3வது டெஸ்ட் போட்டி கடந்த 15ஆம் தேதி ராஜ்கோட் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகின்றது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது.
முதல் இன்னிங்ஸின் முடிவில் இந்திய அணி 445 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாகக் கேடன் ரோகித் சர்மா 131, ரவீந்திர ஜடேஜா 112 மற்றும் சஃப்ராஸ் கான் 62 ரன்களும் விளாசினார். இங்கிலாந்து அணி சார்பில் மார்க் வுட் 4 விக்கெட்களும், ரெஹான் அகமது 2 விக்கெட்களும் வீழ்த்தினர்.
இதனைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி நல்ல ஆட்டத்தையே வெளிப்படுத்தி இரண்டாம் நாள் முடிவில் வலுவான நிலையிலேயே இருந்தது. ஆனால் நேற்று பேட்டிங்கை தொடர்ந்த அந்த அணி மளமளவென விக்கெட்களை இழந்து 319 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக பென் டக்கெட் 153 ரன்களும், பென் ஸ்டோக்ஸ் 41 ரன்களும் எடுத்தனர். இந்திய அணியின் சார்பில் சிராஜ் 4, குல்தீப் மற்றும் ஜடேஜா தலா 2 விக்கெட்களும் கைப்பற்றி அசத்தினர்.
இதனால் 126 ரன்கள் முன்னிலை வகித்த இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. ரோகித் சர்மா 19, ராஜட் பட்டிதர் 0 மற்றும் குல்தீப் யாதவ் 27 ரன்களில் ஆட்டமிழந்தனர். சிறப்பாக விளையாடிய ஜெய்ஸ்வால் - சுப்மன் கில் கூட்டணி அணிக்கு ரன்களை குவித்தது.
சுப்மன் கில் 91 ரன்களில் இருந்த போது ரன் அவுட் ஆனார். ஆனால் தொடர்ந்து களத்திலிருந்த ஜெய்ஸ்வால் இரட்டை சதத்தை விளாசினார். இந்த இரட்டை சதத்தின் மூலம் இங்கிலாந்து அணிக்கு எதிராக ஒரு தொடரில் இரண்டு இரட்டை சதங்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதியாக இந்திய அணி 4 விக்கெட்கள் இழப்பிற்கு 430 ரன்களுடன் 556 ரன்கள் முன்னிலையிலிருந்த போது ஆட்டத்தை டிக்லர் செய்தது.
இந்த நிலையில், இங்கிலாந்து அணி 557 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி வருகின்றது. பென் டக்கெட் 4, ஜாக் கிராலி 11, ஒல்லி போப் 3, ஜானி பேர்ஸ்டோவ் 4 ரன்களிலும் ஆட்டமிழந்துள்ளனர். தற்போது 4 விக்கெட்கள் இழப்பிற்கு 41 ரன்கள் எடுத்த நிலையில், இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜோ ரூட் களத்தில் நின்று விளையாடி வருகின்றது.
இதையும் படிங்க:தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மைக் ப்ராக்டர் காலமானார்!