டெல்லி:இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் குவாலியரில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில், இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதும் 2-வது டி20 போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இரவு 7 மணிக்கு தொடங்கி இந்த போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக சஞ்சு சாம்சன் - அபிஷேக் சர்மா ஆகியோர் களமிறங்கினர். இதில் சஞ்சு சாம்சன் 10 ரன்னுக்கும், 3 பவுண்டரியை துரத்திய அபிஷேக் சர்மா15 ரன்னுக்கும் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து வந்த கேப்டன் சூரியகுமார் யாதவ் 8 ரன்னுக்கு அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். இதன் பின்னர் 4வது விக்கெட்டிற்கு நிதிஷ் ரெட்டி - ரிங்கு சிங் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர்.
இதையும் படிங்க:147 ஆண்டுகால விம்பிள்டன் டென்னிசில் மிகப்பெரிய மாற்றம்! இனி இவங்கள பார்க்கவே முடியாதா!
இருவரும் இணைந்து வங்கதேச பந்து வீச்சாளர்களை நாலாபுறமும் சிதறடித்தனர். இதில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிதிஷ் 34 பந்துகளில் 7 சிக்ஸர், 4 பவுண்டரி என 74 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து 5 பவுண்டரி 3 சிக்ஸர்கள் விளாசிய ரிங்கு சிங் 53 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.
இதன் பின்னர் களமிறங்கிய ஹர்திக் பாண்டிய 32 ரன்களும், ரியான் பராக் 15 ரன்களும் விளாச இந்திய அணி 200 ரன்களை கடந்தது. 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 221 ரன்களை குவித்தது. வங்கதேச அணி தரப்பில் அகமத், ஷகிப் மற்றும் முஸ்தபிசுர் ரஹ்மான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனை தொடர்ந்து 222 ரன்கள் அடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி வகளமிறங்கிய வங்கதேச அணி, இந்திய அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
20 ஓவர்கள் 9 விக்கெட்டுகளை இழந்த வங்கதேசம் அணி 135 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதனால் 86 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இரு அணிகளுக்கு இடையேயான 3வது டி20 போட்டி அக்.12 ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.