குவாலியர்:இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி 2 டெஸ்ட், மற்றும் 3 டி20 போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றது. இந்தநிலையில் இரு அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 தொடர் நாளை (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது.
இந்த போட்டியானது மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் நடைபெறுகிறது. இதன் மூலம் குவாலியரில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது. டி20 தொடருக்கான இந்திய அணி சூர்யகுமார் யாதவ் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் சிவம் துபே, ரிங்குசிங், ஜிதேஷ் சர்மா ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதே போல் சுப்மன் கில், ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது சிராஜ் உள்ளிட்ட வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இளம் இந்திய அணியினர், இதற்கு முன்னதாக நடைபெற்ற இலங்கைக்கு எதிரான தொடரை 3 - 0 என்ற கணக்கில் வீழ்த்தி அசத்தியது. அதே போல் வங்கதேச அணியையும் ஒயிட் வாஷ் செய்யுமா? என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
தொடரை வெல்வோம் :இந்தநிலையில் இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் நிச்சயம் நாங்கள் வெல்வோம் என வங்கதேச அணியின் கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, "உண்மையில் நாங்கள் இந்தத் தொடரை வெல்லப் பார்ப்போம்.
நாங்கள் அதிரடியான கிரிக்கெட்டை விளையாட விரும்புகிறோம். டெஸ்ட் தொடரில் நாங்கள் நன்றாக விளையாடவில்லை என்பது தெரியும். ஆனால் டி20 கிரிக்கெட் வித்தியாசமான விளையாட்டு. இங்கே கடந்த காலங்களில் என்ன நடந்தது என்பது முக்கியமல்ல.இது எங்களுக்கு முக்கியமான தொடர். அதில் சிறப்பாக விளையாட முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. குவாலியர் பிட்ச் பற்றி அதிகம் தெரியாது. ஆனால் இங்கே பயிற்சிகளை செய்து விரைவாக எங்களை தயார் செய்து கொள்வோம்" என தெரிவித்துள்ளார்.