ஐதராபாத்: இந்திய அணி தற்போது அடுத்தடுத்து டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி ரொம்ப பிஸியாக உள்ளது. அண்மையில் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-க்கு 0 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணி, தொடர்ந்து இந்த மாத இறுதியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
அதைத் தொடர்ந்து நவம்பர் மாதம் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணி அங்கு ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் களம் காணுகிறது. அடுத்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு பின் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணி, அங்கு 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.
விராட் கோலியின் கடைசி டெஸ்ட்:
2025ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20ஆம் தேதி இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. மேலும், எட்ஜ்பாஸ்டன், லார்ட்ஸ், ஓல்ட் டிராபோர்ட், ஓவல் மைதானங்களில் அடுத்தடுத்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற உள்ளன.
கடைசியாக 2007ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்றி இருந்தது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அடுத்த ஆண்டு இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது. இந்நிலையில், இங்கிலாந்து டெஸ்ட் தொடரே இந்திய ஜாம்பவான் விராட் கோலிக்கு கடைசி போட்டியாக இருக்கும் என முன்னாள் வீரர் ஸ்டூவர்ட் பிராட் தெரிவித்து உள்ளார்.
தொடரை இங்கிலாந்து வெல்லும்:
இங்கிலாந்து முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டுவர்ட் பிராட் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், இங்கிலாந்து சுற்றுப்பயணம் தான் விராட் கோலிக்கு கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், "இங்கிலாந்து அணியில் திறமையான மற்றும் சூழலுக்கு ஏற்ப விளையாடக் கூடிய இளம் வீரர்கள் அதிகம் உள்ளனர்.
அதிகளவில் இளைஞர்கள், அதேநேரம் அனுபவம் குறைந்து காணப்பட்டாலும் அதீத திறமையின் மூலம் இந்தியாவுக்கு நமது வீரர்கள் கடும் நெருக்கடி கொடுப்பார்கள். இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் பெரும்பாலும் 5-க்கு 0 அல்லது 4-க்கு 0 என்ற கணக்கில் முடிவு பெற அதிகம் வாய்ப்பு உள்ளது.
கடும் நெருக்கடியான ஆட்டம்:
ஒருவேளை இந்தியா கடும் நெருக்கடி அளிக்கும் நிலையில் போட்டி 2-க்கு 2 என்ற கணக்கில் சமனில் முடியலாம். பெரும்பாலும் சொந்த மண்ணில் இங்கிலாந்து அணி வெல்லும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. இந்தியா - இங்கிலாந்து தொடர் சிறப்பு வாய்ந்ததாக இருக்கக் கூடும். 2021ஆம் ஆண்டு லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் இந்தியா சிறப்பாக விளையாடி போட்டியை டிரா செய்து தொடரை சமன் செய்தது.
அந்த டெஸ்ட் போட்டியின் கடைசி நாளில் முகமது சிரஜ் சிறப்பாக பந்துவீசி கடும் நெருக்கடி அளித்தார். அந்த ஆட்டம் இங்கிலாந்து அணிக்கு கடும் நெருக்கடியாக அமைந்தது. வீரர்கள் ஓய்வு அறையில் கூட போட்டியின் மீதான அழுத்தம் என்பது காணப்பட்டது. அதேநேரம் இந்திய வீரர்கள் அந்த போட்டியில் கொண்டாட்டத்துடன் காணப்பட்டனர். விராட் கோலி முகம் சிரிப்பால் மகிழ்ந்து இருந்தது" என்று ஸ்டுவர் பிராட் தெரிவித்தார்.
இதையும் படிங்க:ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் திருமணம்! வீடியோ வைரல்! - Rashid Khan Marriage