ஹராரே:இந்திய அணி ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 கிரிக்கெட் போட்டி இன்று (ஜூலை.7) ஹராரே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணின் கேப்டன் சுப்மன் கில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இந்திய அணியின் தொடக்க வீரர்களாக சுப்மன் கில் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் களமிறங்கினர். முசர்பனி வீசிய ஓவரில் தொடக்க வீரர் சுப்மன் கில் 2 ரன்கள் மட்டும் குவித்து ஆட்டமிழந்தார். இதன் பின் ருதுராஜ் கெய்க்வாட், மற்றொரு தொடக்க வீரர் அபிஷேக் சர்மாவுடன் ஜோடி சேர்ந்தார்.
இருவரும் அதிரடியாக விளையாடி துரித ரன் சேகரிப்பில் ஈடுபட்டனர். அபாரமாக விளையாடிய அபிஷேக் சர்மா அடுத்தடுத்து சிக்சர் மற்றும் பவுண்டரி விளாசினார். மறுபுறம் ருதுராஜ் கெய்க்வாட்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அபாரமாக விளையாடிய அபிஷேக் சர்மா சதம் விளாசினார்.
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை அடித்த அபிஷேக் சர்மா (100 ரன்) அதை கையோடு ஆட்டமிழந்து வெளியேறினார். மறுமுனையில் களமிறங்கிய ரிங்கு சிங், ஜிம்பாப்வே பந்துவீச்சாளர்களை கலங்கடித்தார். சிக்சர் மழை பொழிந்த ரிங்கு சிங் வாண வேடிக்கை காட்டி குழுமி இருந்த ரசிகர்களை உற்சாக வெள்ளத்தில் திளைக்க செய்தார்.
மறுபுறம் அவருக்கு போட்டியாக ருதுராஜ் கெய்க்வாட்டும் ஏதுவான பந்துகளை எல்லைக் கோட்டுக்கு அனுப்புவதை தவறவில்லை. 7 பந்துவீச்சாளர்களை பயன்படுத்தி பார்த்தும் இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் ஜிம்பாப்வே கேப்டன் சிக்கந்தர் ராசா திணறிப் போனார். இதனிடையே ருதுராஜ் கெய்க்வாட் அரை சதம் கடந்தும் தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார்.
20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 234 ரன்களை இந்திய அணி குவித்தது. ருதுராஜ் கெய்க்வாட் 11 பவுண்டரி 1 சிக்சருடன் 77 ரன்களும், அதிரடி மன்னன் ரிங்கு சிங் 2 பவுண்டரி 5 சிக்சர்கள் விளாசி 48 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர். 20 ஓவர்களில் 235 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி ஜிம்பாப்வே அணி விளையாடி வருகிறது.
20 ஓவர் கிரிக்கெட் பார்மட்டில் கடைசி 10 ஓவர்களில் அதிகபட்ச ரன் குவித்து இந்திய அணி சாதனை படைத்தது. ஜிம்பாப்வே அணிக்கு எதிராக கடைசி 10 ஓவரில் மட்டும் இந்திய அணி 160 ரன்களை குவித்து புது மைல்கல் எட்டியது. இதற்கு முன் 2007ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பெர்க்கில் நடைபெற்ற ஆட்டத்தில் இலங்கை அணி கென்யாவுக்கு எதிராக கடைசி 10 ஓவரில் 159 ரன்களை குவித்தது.
அதற்கும் முன் கடந்த 2019ஆம் ஆண்டு உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் நடைபெற்ற ஆட்டத்தில் அயர்லாந்து அணிக்கு எதிராக ஆப்கானிஸ்தான் 156 ரன்களை குவித்தது. மேலும் 2020ஆம் ஆண்டு நியூசிலாந்தின் மவுன் மாங்கனுயில் நடைபெற்ற ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நியூசிலாந்து 154 ரன்களை குவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் 20 ஓவர் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணியின் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர் இது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 229 ரன்கள் குவித்ததே முந்தைய அதிகபட்ச ஸ்கோராகும்.
அதேபோல் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக இந்திய வீரர்கள் 14 சிக்சர்களை விளாசினர். இதற்கு முன் கடந்த 2019ஆம் ஆண்டு மிர்புரில் நடைபெற்ற ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 15 சிக்சர்கள் விளாசி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:டாஸ் வென்று இந்தியா பேட்டிங் தேர்வு! தோல்விக்கு பழிதீர்க்குமா? - Ind vs Zim 2nd T20