புடாபெஸ்ட்:45வது செஸ் ஒலிம்பியாட் கடந்த ஆகஸ்ட் 11ஆம் தேதி ஹங்கேரியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ஓபன் பிரிவு மற்றும் பெண்கள் பிரிவு என 2 பிரிவுகளில் போட்டிகள் நடைபெறும். இதில் ஓபன் பிரிவில் 197 அணிகளும், பெண்கள் பிரிவில் 184 அணிகளும் பங்கேற்று விளையாடி வருகின்றன.
இந்தப் போட்டியில் இந்தியாவிலிருந்து ஓபன் பிரிவில்அர்ஜுன் எரிகைசி, பிரக்ஞானந்தா, குகேஷ், விதித் குஜராத்தி, ஹரிக்ரிஷ்ணா பெந்தாலா ஆகியோர் உள்ளனர். மகளிர் பிரிவில் ஹரிகா, வைஷாலி, திவ்யா தேஷ்முக், வந்திகா அகர்வால், தானியா சச்தேவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த தொடரில் இரு பிரிவிலும் இந்திய அணியினர் அசத்தி வருகின்றனர். குறிப்பாக, 6வது சுற்றில் இந்திய ஆடவர் பிரிவில் இந்தியா - ஹங்கேரி அணிகள் மோதின. இதில் இந்தியா 3-1 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற 7வது சுற்றில் சீனாவை எதிர்கொண்ட இந்திய அணி 2.5-1.5 என்ற புள்ளிக் கணக்கில் வென்றது. மற்ற 3 இந்திய வீரர்களும் மேட்சை டிராவில் முடிக்க, டி.குகேஷ் தனது 80வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். அதேபோல், ஜியார்ஜியாவுடன் மோதிய இந்திய மகளிர் அணி 3-1 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது.
இதனால் 7வது சுற்று முடிவில் இரு அணிகளும் தலா 14 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கின்றன. 8வது சுற்றில் ஆடவர் அணி ஈரானுடனும், மகளிர் அணி போலந்துடனும் பல்ப்பரீட்சை நடத்த உள்ளன.
தங்கம் வெல்லுமா இந்தியா?11 சுற்றுகள் கொண்ட 7 போட்டிகளில் இந்தியா முன்னிலை வகித்து வருகிறது. இன்னும் மீதமுள்ள 4 போட்டிகளில் மட்டும் இந்தியா ஆதிக்கம் செலுத்தினால் நிச்சயமாக தங்கம் வெல்லும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டு இருக்கின்றனர். கடந்த முறை சென்னையில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்திய அணி வெண்கலம் வென்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ஒலிம்பிக் போட்டிகளில் செயல்திறன் குறைந்து வருகிறதா? தங்கவேல் மாரியப்பன் நச் பதில்!