நியூயார்க்:கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருந்த இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி சுவாரஸ்யமாக நடைபெற்று முடிந்துள்ளது. நியூயார்க் நகரில் உள்ள நாசாவ் கவுண்டி மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன் படி முதலில் களமிறங்கிய இந்திய அணி, பாகிஸ்தான் பந்து வீச்சாளர்களை எதிர் கொள்ள முடியாமல் திணறியது. இதனால் 19 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 119 ரன்கள் சேர்த்தது இந்தியா. பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிஷப் பண்ட் 31 பந்துகளில் 42 ரன்களை விளாசினார். பாகிஸ்தான் தரப்பில் நசீம் ஷா, ஹரிஷ் ரவூப் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட போட்டியில் இந்தியாவின் பேட்டிங்கை கண்டு ரசிகர்கள் அனைவரும் சோகத்தில் இருந்தனர்.
இந்நிலையில், 120 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது பாகிஸ்தான். தொடக்க ஆட்டக்காரர்களாக பாபர் அசாம், முகமது ரிஸ்வான் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் இணைந்து விளையாடியதைப் பார்க்கும் போது 10 ஓவர்களில் ஆட்டமே முடித்துவிடும் என எண்ணிக்கொண்டு இருந்த வேளையில், ஆட்டத்தின் போக்கை மாற்றினார் பும்ரா.
முதலில் கேப்டன் பாபர் அசாம் விக்கெட்டை வீழ்த்தினார். அதன் பிறகு, பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் சீட்டுக்கட்டை போல் விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது. 4 ஓவர்களில் 14 ரன்களை மட்டும் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார் பும்ரா.
அவரின் ஓவர்களால்தான் ஆட்டம் இந்தியா பக்கமே திரும்பியது. அதேபோல் ஹர்திக், அர்ஷ்தீப் சிங் ஆகியோரும் சிறப்பாக பந்து வீசினர். இந்திய அணியின் இந்த வெற்றியைத் தொடர்ந்து கிரிக்கெட் ஜாம்பவான்களும், எக்ஸ்பர்ட்ஸ்களும் இந்திய அணிக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.