சென்னை: “பாராலிம்பிக்ஸில் எனது மகள் வெள்ளிப் பதக்கம் வென்ற பிறகு என்னிடம் தொலைபேசியில் பேசினார். அப்போது என்னால் தங்கப் பதக்கத்தை வெல்ல முடியவில்லை, ஆனால், நிச்சயமாக அடுத்த முறை தங்கப் பதக்கம் வெல்வேன்” என்று சொன்னதாக கூறிய சீன வீராங்கனை யாங் கியூ ஷியாவிடம் இறுதிப் போட்டியில் மோதிய துளசிமதி முருகேசனின் தந்தை, “அவர் பயமில்லாமல் விளையாடி இந்த வெற்றியைப் பெற்றுள்ளார்” என ஈடிவி பாரத்திடம் பூரிப்புடன் கூறினார்.
இந்தியாவின், தமிழ்நாட்டில் உள்ள காஞ்சிபுரம் மாவட்டம், பழைய ரயில் நிலையம் அருகே வசித்து வரும் இவர் தான், கால்நடை மருத்துவப் படிப்பை படித்து வருகிறார். இதனிடையே, தனது விடாமுயற்சி மற்றும் பயிற்சியின் மூலம் ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்றிருந்தார். எனவே, “ஏற்கனவே ஆசிய விளையாட்டுப் போட்டியில் சீனாவுக்கே சென்று அவர்களது மண்ணில் தங்கப் பதக்கத்தை வென்றார் எனது மகள். எனவே, அடுத்த முறை நிச்சயம் தங்கம் வெல்வார்” என உறுதிபடக் கூறினார் முருகேசன்.
ஆனால், ஒரு மருத்துவப் படிப்பை மேற்கொள்ளும் பெண், இடையிடையே பயிற்சியில் ஈடுபட்டு பாராலிம்பிக்ஸ் வரை சென்று, பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் வெள்ளிப் பதக்கத்தை வென்றிருப்பது தமிழ்நாடு அரசின் மாநில விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் முழு முயற்சி என்கிறார் முருகேசன்.
காரணம், “கால்நடை மருத்துவம் படித்து வரும் எனது மகளுக்கு விடுப்பு எடுக்க முடியாது. இருந்தாலும், தமிழ்நாடு அரசின் மாநில விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலரைத் தொடர்பு கொண்டு இது குறித்து பேசினேன். உடனடியாக, அவர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினைச் சந்தித்து, எனது மகளையும் வைத்துக் கொண்டே 45 நாட்கள் விடுப்பு மற்றும் பயிற்சி குறித்து முறையிட்டார். பின்னர், மிகவும் விறுவிறுப்பாக என் மகள் கேட்ட விடுப்பு வழங்கப்பட்டது. இந்த நேரத்தில் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார். இந்த நன்றியை பதக்கம் வென்ற மறுநிமிடம் பேசிய 22 வயதான துளசிமதியும் நினைவு கூர்ந்தார் எனவும் அவர் தெரிவித்தார்.