போலந்து:போலந்து நாட்டில் 9வது கிராண்ட் செஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்தியாவைச் சேர்ந்த குகேஷ், பிரக்ஞானந்தா, அர்ஜுன் ஆகியோரும், நார்வேயைச் சேர்ந்த மாக்னஸ் கார்ல்சன் உட்பட 10 பேர் பங்கேற்றனர்.
இந்த 9வது கிராண்ட் செஸ் தொடர் போலந்து, ருமேனியா, குரோஷியா ஆகிய நாடுகளில் தலா ஒரு போட்டியும், அமெரிக்காவில் இரண்டு போட்டி என இந்த ஆண்டு முழுவதும் மொத்தம் 5 போட்டிகள் நடக்கும். தொடரின் முடிவில் அதிக புள்ளிகளைப் பெறும் வீரர் கோப்பையை தட்டிச் செல்வார்.
கடந்த சில நாள்களுக்கு முன் தொடக்கப்பட்ட இந்த தொடரின் நேற்றைய போட்டியில் உலகின் நம்பர் 1 வீரரான கார்ல்சனை எதிர்த்து விளையாடினார் பிரக்ஞானந்தா. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் மேக்னஸ் கார்ல்சனை எளிதாக வீழ்த்தி அசத்தினார்.
வெள்ளை நிறக் காய்களுடன் களமிறங்கிய அவர், 69வது நகர்த்தலில் கார்ல்சனை வீழ்த்தினார். தொடர்ந்து ஐந்தாவது சுற்றில் ருமேனிய வீரர் செவ்சென்கோவையும், 6வது சுற்றில் சக வீரர் குகேஷையும் வென்றார் பிரக்ஞானந்தா. இதன் மூலம் 14.5 புள்ளிகளுடன், புள்ளிப் பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். அதேபோல், 20.5 புள்ளிகளுடன் சீனாவின் வெய் இ முதலிடத்திலும், 18 புள்ளிகளுடன் மேக்ன்ஸ் கார்ல்சன் 2வது இடத்திலும் உள்ளனர்.
இந்தியாவின் மற்றொரு வீரரான அர்ஜுன் எரிகைசி 14 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற செஸ் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் மேக்னஸ் கார்ல்சனிடம் தோல்வியுற்றார் பிரக்ஞானந்தா. அதற்கு பதிலடி தரும் விதமாக இந்த போட்டியில் வெற்றி பெற்றுள்ளார். இதனையடுத்து, பல்வேறு தரப்பினரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க:சிலம்பத்திற்கு இப்படி ஒரு வரலாறா? எகிப்திற்கு சிலம்பம் சென்றது எப்படி? சிலிர்ப்பூட்டும் தகவல்கள்!