சென்னை:8 அணிகள் பங்கேற்றுள்ள அல்டிமேட் டேபிள் டென்னிஸின் 5வது தொடர் சென்னை ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதி போட்டிக்கு முன்னேறும்.
அதன்படி, லீக் சுற்றின் முடிவில் கோவா சேலஞ்சர்ஸ், பெங்களூரு ஸ்மாஸர்ஸ், அகமதாபாத், மற்றும் டெல்லி ஆகிய 4 அணிகள் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. இதன் முதல் அரையிறுதி ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில், நடப்பு சாம்பியனான கோவா சாலஞ்சர்ஸ், பெங்களூரு ஸ்மாஸர்ஸ் அணியுடன் மோதியது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியின் முடிவில் 8-4 என்ற கணக்கில் பெங்களூருவை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது கோவா.
- முதலில் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் மிஹாய் போபோசிகா, அல்வாரோ ரோபிள்ஸுடன் மோதினார். இதில் மிஹாய் போபோசிகா 2-1 (11-8, 11-7, 7-11) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
- 2-வது நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவில் யாங்சி லியு - மணிகா பத்ராவுடன் பலப்பரீட்சை நடத்தினார். இதில் மணிகா பத்ரா 1-2 (11-4, 6-11, 4-11) என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார்.
- 3-வதாக நடைபெற்ற கலப்பு இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் ஹர்மீத் தேசாய், யாங்சி லியு ஜோடியானது - அல்வாரோ ரோபிள்ஸ், மணிகா பத்ரா ஜோடியுடன் மோதியது. இதில் எழுச்சி கண்ட மணிகா பத்ரா, அல்வாரோ ரோபிள்ஸ் ஜோடி 2-1 (10-11, 7-11, 11-9) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது.
- 4-வது நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஹர்மீத் தேசாய், பெங்களூரு ஸ்மாஸர்ஸ் அணியின் ஜீத் சந்திராவை எதிர்கொண்டார். இதில், ஹர்மீத் தேசாய் 3-0 (11-5, 11-6,11-8) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதன் மூலம் கோவா சாலஞ்சர்ஸ் அணி 8-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.