சென்னை:சென்னையில் இரவு நேர ஃபார்முலா 4 கார் பந்தயம் ஆகஸ்ட் 31-ல் தொடங்க இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 8 அணிகள் பங்கு பெறும் இந்த கார் பந்தயத்தில் 32 வீரர்கள் பங்கு பெற இருக்கின்றன.
5 சுற்றுகள் நடைபெறும் ஃபார்முலா 4 கார் பந்தயத்தில் முதல் சுற்று ஸ்ரீபெரும்புதூர் இருங்காட்டுக்கோட்டையிலும், இரண்டாவது சுற்று சென்னையிலும், மூன்றாவது சுற்று கோயம்புத்தூரிலும், நான்காவது சுற்று கோவாவிலும், ஐந்தாவது சுற்று கொல்கத்தாவிலும் நடைபெற இருக்கிறது. இந்த ஐந்து சுற்றுகளின் முடிவில், அதிக புள்ளிகளைப் பெறும் அணியினர் சாம்பியன் பட்டத்தை பெறுவார்கள்.
இந்நிலையில், கடந்த 18 வருடமாக ஃபார்முலா கார் பந்தயத்தில் முத்திரை பதித்து வருபவரும், தற்போது ஃபார்முலா 4 பந்தயத்தில் சென்னை அணி சார்பில் பங்கேற்கும் சேத்தன் கொராடா ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.
அதில், "நான் பிறக்கும்போது கால் பாதங்கள் சரிவர இயங்காத நிலையில் இருந்தது. நான் மூன்று வயதில் இருக்கும் பொழுது என்னுடைய இரு கால்களையும் எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்ததால், கடின மனதுடன் என் பெற்றோர் சம்மதித்தனர். இரு கால்களும் எடுக்கப்பட்டால் வாழ்நாள் முழுவதும் வீல் சேரில் பயணிக்க வேண்டிய சூழலில் இருக்கும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
ஆனால், தொழில்நுட்ப உதவியுடன் தற்போது கார்பனால் செய்யப்பட்ட செயற்கை கால் பொருத்தப்பட்டு ஃபார்முலா கார் பந்தயங்களில் பங்குபெறும் அளவிற்கு என்னை தயார்படுத்திக் கொண்டேன். இதுவரை 250க்கும் மேற்பட்ட கார் பந்தயங்களில் பங்கேற்றுள்ளேன். அது எனக்கு பல்வேறு அனுபவங்களை பெற்றுக் கொடுத்தது.
மேலும், நான் கடந்த 2017ஆம் ஆண்டு ஃபார்முலா 16, கடந்த 2019ஆம் ஆண்டு ஃபார்முலா 13 ஆகிய போட்டிகளில் மூன்றாவது இடமும், 2020ஆம் ஆண்டு நடைபெற்ற எம்ஆர்எப் தொடரில் மூன்றாவது இடமும் பிடித்துள்ளேன்.
சென்னையில் நடைபெறும் ஃபார்முலா 4 கார் பந்தயத்திற்கு சென்னை அணியினர் என்னை தேர்வு செய்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. சென்னையில் சுற்றித்திரிந்த இடத்தில் கார் பந்தயத்தில் செல்ல இருப்பது மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய விதமாக உள்ளது.
ஃபார்முலா 4 கார் பந்தயம் நடைபெறும் இடத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அதனால் எந்த வித அச்சமின்றி போட்டியில் பங்கேற்கிறேன். கார் பந்தயம் விளையாடுவதற்கு என்னுடைய குடும்பத்தினர் அனைவரும் பெரும் ஆதரவு கொடுத்தனர்.