சென்னை:சென்னையில் கார் பந்தயம் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட சில நாட்களில் சென்னை சாலைகளில் கார் பந்தயம் நடத்துவதற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளுடன் போட்டியை நடத்த அனுமதி வழங்கியது. இதனையடுத்து, கடந்த ஆண்டு ஒத்திவைக்கப்பட்ட ஃபார்முலா 4 கார் பந்தயம் போட்டிகள் மீண்டும் வருகிற ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1ஆம் தேதிகளில் நடைபெறும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவிலேயே முதல்முறையாக இந்த ஃபார்முலா ரேஸிங் சர்க்யூட் போட்டி நடைபெற உள்ளது. ஸ்ட்ரீட் சர்க்யூட் பந்தயங்களான ஃபார்முலா 4 பந்தயம், சென்னை தீவுத்திடல் மைதானத்தைச் சுற்றியுள்ள 3.5 கி.மீ சுற்றளவு கொண்ட சாலையில் இரவு போட்டியாக நடைபெற உள்ளது.
அதன்படி, தீவுத்திடலில் தொடங்கும் கார் பந்தயமானது அண்ணா சாலை, சிவானந்த சாலை, நேப்பியர் பாலம் வழியாக மீண்டும் தீவுத்திடலைச் சென்றடைவது போல இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் தெற்கு ஆசியாவில் முதல்முறையாக இரவு நேரத்தில் சாலை வழியாக நடத்தப்படும் கார் பந்தயம் இது என்பதால், மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளது. இதில் இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். எனவே, இந்த போட்டியை நடத்த தமிழ்நாடு அரசு ரூ.42 கோடி ஒதுக்கீடு செய்தது.