முல்தான்: பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள இங்கிலாந்து அணி மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. பஞ்சாப் மாகாணத்தின் முல்தான் நகரில் நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதில் கேப்டன் ஷான் மசூத், அப்துல்லா ஷபிக் மற்றும் சல்மான் ஆகா ஆகியோரின் சதத்தின் உதவியுடன் பாகிஸ்தான அணி முதல் இன்னிங்சில் 556 ரன்களை குவித்தது. இதனை அடுத்து முதல் இன்னிங்சில் விளையாடி வரும் இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர் ஜாக் கிராலி 78 ரன்களும், கேப்டன் ஆலிவ் போப் டக் அவுட்டாகியும் வெளியேறினார்.
இந்த நினைவில் அந்த அணியின் நட்சத்திர வீரரான ஜோ ரூட் தொடர்ந்து அபாரமாக விளையாடி வருகிறார். ஜோ ரூட்டின் விக்கெட்டை எடுக்க முடியாமல் பாகிஸ்தான் வீரர்கள் தடுமாறி வருகின்றனர். இந்த சூழலில் ஜோ ரூட் 167 பந்துகளில் சதம் விளாசினார். இதில் ஏழு பவுண்டரிகள் அடங்கும். இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜோ ரூட் 35வது சதத்தை விளாசினார்.
இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர், வெஸ்ட் இண்டீஸ் வீரர் பிரைன் லாரா, பாகிஸ்தானின் யூனிஸ் கான், இலங்கை வீரர் ஜெயவர்த்தனே ஆகியோரை பின்னுக்குத் தள்ளி ஜோ ரூட் தற்போது ஆறாவது இடத்தை பிடித்துள்ளார்.