நியூ யார்க்:கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் கடந்த வாரம் தொடங்கி நடைபெற்றது. இதில் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவில் இத்தாலி வீரர் ஜன்னிக் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார். 2024ஆம் ஆண்டுக்கான அமெரிக்க ஓபன் ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ் என்பரவை இத்தாலியின் ஜன்னிக் சின்னர் எதிர்கொண்டார்.
ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி வந்த ஜன்னிக் சின்னர், அமெரிக்க வீரருக்கு கடும் நெருக்கடி கொடுத்து பாயின்ட்களை சேர்க்க விடாமல் தடுத்தார். இறுதியில் ஜன்னிக் சின்னர் 6-க்கு 3, 6-க்கு 4, 7-க்கு 5 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
ஆஸ்திரேலிய ஓபன்:
மேலும் அமெரிக்க ஓபன் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை முதல் முறையாக ஜன்னிக் சின்னர் கைப்பற்றி சாதனை படைத்தார். அதேநேரம் ஜன்னிக் சின்னருக்கு இது இரண்டாவது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும். முன்னதாக ஆண்டு தொடக்கத்தில் ஜனவரி மாதம் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று இருந்தார்.
இதன் மூலம் ஒரே சீசனில் ஆஸ்திரேலியா ஓபன் மற்றும் அமெரிக்க ஓபன் என இரண்டு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற 4வது டென்னிஸ் வீரர் என்ற சாதனையை ஜன்னிக் சின்னர் படைத்துள்ளார். இதற்கு முன் மாட்ஸ் விலாண்டர், ரோஜர் பெடரர், நோவாக் ஜோகோவிக் ஆகிய மூவர் ஒரே சீசனில் ஆஸ்திரேலிய ஓபன் மற்றும் அமெரிக்க ஓபன் ஆகிய இரண்டு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.