கோயம்புத்தூர்:8வது டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர் சேலத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது 2ம் கட்ட லீக் போட்டிகள் கோயம்புத்தூரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 16வது லீக் போட்டியில் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் - சாய் கிஷோர் தலைமையிலான ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் மோதின.
கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற அஸ்வின் பந்து வீச்சை தேர்வு செய்தார். ஆனால், போட்டி தொடங்குவதற்கு முன் மழை குறுக்கிட்டதால் 2 மணி நேரம் தாமதமாக போட்டி தொடங்கியது. இதனால் 13 ஓவர் கொண்ட போட்டியாக மாற்றப்பட்டது.
108 ரன்கள் இலக்கு:இதனையடுத்து ராதாகிருஷ்ணன் - துஷார் ரஹேஜா ஆகியோர் திருப்பூர் அணி ஓபனிங் பேட்ஸ்மேன்களாக களமிறங்கினர். இருவரும் இணைந்து 71 ரன்களை சேர்த்தனர். இதில் ராதாகிருஷ்ணன் 36 ரன்களுக்கும், துஷார் ரஹேஜா 32 ரன்களுக்கு விக்கெட் இழந்து பெவிலியன் திரும்பினர். இதனையடுத்து களமிறங்கிய அமித் சத்விக் 28 ரன்கள் சேர்த்தார்.
மற்ற பேட்ஸ்மேன்கள் யாரும் பெரியதாக சோபிக்கவில்லை. இதனால் 13 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 108 ரன்கள் குவித்தது திருப்பூர் தமிழன்ஸ் அணி. திண்டுக்கல் அணி தரப்பில் சுபோத் பதி 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
பூபதி குமார் அபாரம்:இதனையடுத்து 109 ரன்கள் அடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய திண்டுக்கள் டிராகன்ஸ் அணியின் ஓபனிங் பேட்ஸ்மேனாக விமல் குமார் மற்றும் சிவம் சிங் ஆகியோர் களமிறங்கினர். இதில், 4 ரன்களுக்கு சிவம் சிங் ஆட்டமிழந்து வெளியேற, மற்றொரு ஓபனிங் பேட்ஸ்மேனான விமல் குமார் 17 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து பூபதி குமார் மற்றும் பாபா இந்திரஜித் ஆகியோர் ஜோடி சேர்ந்து, திருப்பூர் அணியின் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர்.