தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

அஸ்வின் மற்றும் ஷிவம் சிங் அதிரடி.. சேப்பாக்கை நாக் அவுட் செய்தது திண்டுக்கல்! - TNPL 2024 - TNPL 2024

TNPL 2024 CSG vs DD: சேப்பாக் சூப்பர் கில்லீஸை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி குவாலிஃபையருக்கு 2க்கு முன்னேறியது அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணி.

இரு அணி வீரர்கள்
இரு அணி வீரர்கள் (Credit - TNPL)

By ETV Bharat Sports Team

Published : Aug 1, 2024, 7:05 AM IST

திண்டுக்கல்:தமிழ்நாடு பிரீமியர் லீக் 2024 சீசன் எலிமினேட்டர் சுற்றில், திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸை வீழ்த்தியது. இதன் மூலம் இந்த சீசனின் 2வது குவாலிஃபையர் போட்டிக்குத் தகுதிப் பெற்றது திண்டுக்கல் டிராகன்ஸ் அணி.4 முறை டி.என்.பி.எல் சாம்பியனான சேப்பாக் அணி இந்த தோல்வியின் மூலம் தொடரிலிருந்து வெளியேறியது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக பாபா அபராஜித் 54 பந்துகளில் 72 ரன்கள் எடுத்தார்.

அதோடு தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் 2,000 ரன்களைக் கடந்த 3வது வீரர் என்ற மைல்கல்லையும்
எட்டியுள்ளார். திண்டுக்கல் அணியின் பௌலிங்கைப் பொறுத்தவரை சந்தீப் வாரியர் அதிகபட்சமாக
2 விக்கெட்கள் எடுத்தார்.

159 இலக்கு:இதனையடுத்து 159 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது திண்டுக்கல். தொடக்க ஆட்டகாரர்களாக விமல்குமார் மற்றும் ஷிவம் சிங் ஆகியோர் களமிறங்கினர். இதில் ராஹில் ஷா வீசிய 2வது ஓவரில் விமல் குமார் 3 ரன்களில் ஆட்டமிழந்து மோசமான தொடக்கத்தைக் கொடுத்தார்.

இதன் பின்னர் ஷிவம் சிங் மற்றும் கேப்டன் அஸ்வின் ஆகியோர் இணைந்து மளமளவென ரன்களை குவித்தனர். இதில் அதிரடியாக விளையாடிய அஸ்வின் டிஎன்பிஎல் தொடரில் 2வது அரைசதத்தைப் பதிவு செய்தார். இவ்விரு வீரர்களும் இணைந்து 2வது விக்கெட்டிற்கு 112 ரன்கள் சேர்த்து திண்டுக்கல் அணியை வலுவான நிலைக்கு கொண்டு சென்றனர்.

அஷ்வின் மற்றும் ஷிவம் சிங் அபாரம்:மறுபுறம் தொடர்ச்சியாக 3வது 50+ ரன்களைக் கடந்து ஷிவம் சிங் மீண்டும் இந்த சீஸனின் டி.வி.எஸ் ரெய்டர் ஆரஞ்சு கேப்பை தன் வசப்படுத்தினார். திண்டுக்கல் அணியின் வெற்றிக்கு கடைசி 7 ஓவர்களில் 45 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது.

இந்த நிலையில் பிரேம் குமார் எக்ஸ்ட்ரா பவுன்ஸ் கொடுக்க, அந்த பந்தை கீப்பர் பின்புறம் தட்டிவிட நினைத்த அஷ்வினின்(57 ரன்), விக்கெட் கீப்பர் ஜெகதீசனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதற்கு அடுத்த பந்திலேயே பாபா இந்திரஜித் (0) ரன் எதுவும் எடுக்காமல் டாரில் ஃபெராரியோவின் அபாரமான ஃபீல்டிங்கால் ரன் அவுட்டாக, அவருக்கு அடுத்து களமிறங்கிய பூபதி வைஷ்ண குமாரும் (1ரன்) ஆட்டமிழந்து வெளியேறினார்.

இதனால் சேப்பாக் அணிக்கு ஆட்டத்தை தங்கள் பக்கம் திருப்ப முடியுமென்கிற நம்பிக்கைப் பிறந்தது. சிறப்பாக விளையாடி வந்த ஷிவம் சிங் 49 பந்துகளில் 64 ரன்கள் எடுத்து அபிஷேக் தன்வரின் வியூகத்தில் தனது விக்கெட்டை இழக்க, ஆட்டம் பரபரப்பான கட்டத்தை எட்டியது.

இறுதியில் ஒரு பந்து மீதமிருக்க திண்டுக்கல் டிராகன்ஸ் 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸை வீழ்த்தி குவாலிஃபையர் 2க்கு தகுதிப் பெற்றது. இந்த தோல்வியின் மூலம் 4 முறை சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் இந்த சீஸனிலிருந்து வெளியேறியது.

இந்த வெற்றியின் மூலம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறும் குவாலிஃபையர் 2 சுற்றில் திருப்பூர் தமிழன்ஸ்-ஐ எதிர்கொள்கிறது திண்டுக்கல் டிராகன்ஸ்.

இதையும் படிங்க:கர்ப்பத்திலும் நாட்டுக்காக விளையாட்டு.. எகிப்து வாள்வீச்சு வீராங்கனையின் நெகிழ்ச்சி பதிவு!

ABOUT THE AUTHOR

...view details