திருநெல்வேலி:8வது டிஎன்பில் கிரிக்கெட் தொடரின் 3ஆம் கட்ட லீக் போட்டிகள் திருநெல்வேலியில் உள்ள இந்திய சிமெண்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரண்டு லீக் போட்டிகள் நடைபெற்றன.
இதன் முதல் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் - ஷாருகான் தலைமையிலான லைகா கோவை கிங்ஸ் அணியை எதிர் கொண்டது. நேற்று மாலை 3.15 மணிக்கு தொடங்கிய, இந்த போட்டியில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
173 இலக்கு:அதன்படி முதலில் களமிறங்கிய கோவை அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் குவித்தது.இதில் அதிரடியாக ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ஷாருக்கான் அரைசதம் விளாசினார். இதற்கு அடுத்தபடியாக சாய் சுதர்சன் 33 ரன்களும், அதீக் உர் ரஹ்மான் 29 ரன்களும் விளாசினர்.
திண்டுக்கல் அணி தரப்பில் வருண் சக்ரவர்த்தி 2 விக்கெட்டுகளையும் வி.பி.திரன், வாரியார் மற்றும் விக்னேஷ் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதனையடுத்து 173 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிறங்கியது திண்டுக்கல் டிராகன்ஸ்.
அந்த அணியின் அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன்களான விமல் குமார் 13 ரன்னிலும், ஷிவம் சிங் 36 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதனைத் தொடர்ந்து களமிறங்கிய சரத்குமார் 20 ரன்களுக்கும், பூபதி குமார் மற்றும் கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் டக் அவுட் ஆகியும் ஏமாற்றம் அளித்தனர்.
பாபா இந்திரஜித் அதிரடி:ஒரு புறம் விக்கெட்டுகளை இழந்தாலும் மறுபுறம் நிலைத்து நின்று விளையாடிய பாபா இந்திரஜித், அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். 49 பந்துகளை எதிர் கொண்ட அவர் 11 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 96 ரன்கள் விளாசினார். இதனால் 19.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் குவித்த திண்டுக்கல் அணி, 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கோவை வீழ்த்திய திண்டுக்கல்:நடப்பு டிஎன்பில் முதலில் விளையாடிய 4 போட்டிகளிலும் வெற்றி பெற்ற கோவை கிங்ஸ், திண்டுக்கல் அணிக்கு எதிரான் போட்டியில் தோல்வியை சந்தித்துள்ளது. இருப்பினும் 8 புள்ளிகளுடன் தொடர்ந்து புள்ளிப்பட்டியலில் முதல் இடம் வகிக்கிறது. திண்டுக்கல் அணியைப் பொறுத்தவரையில் 5வது இடத்திலிருந்து 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
திருப்பூர் வெற்றி:நேற்று நடைபெற்ற மற்றொரு லீக் போட்டியில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் - திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் முதலில் விளையாடிய திருப்பூர் அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 192 ரன்களை குவித்தது. இதனையடுத்து களமிறங்கிய சேலம் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதனால் சேலம் அனியை வீழ்த்திய 51 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது திருப்பூர் அணி.
இதையும் படிங்க:அரபு எமிரேட்ஸ் மகளிர் அணியை பந்தாடிய இந்திய மகளிர் அணி.. கேப்டன், விக்கெட் கீப்பர் அசத்தல்! -