சென்னை:டிஎன்பில் (TNPL 2024) என்று அழைக்கப்படக்கூடிய தமிழ்நாடு பிரீமியர் லீக் கடந்த மாதம் 5ஆம் தேதி சேலத்தில் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து கோவை, நெல்லை, திண்டுக்கல் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது. 8 அணிகள் பங்கேற்று விளையாடி இந்த தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இந்த நிலையில் நேற்று குவாலிஃபையர் 2வது போட்டி நடைபெற்றது. இதில், லைகா கோவை கிங்ஸியிடம் குவாலிஃபையர் 1ல் தோல்வியைத் தழுவிய திருப்பூர் தமிழன்ஸ் அணியும், சேப்பாக் சூப்பர் கில்லீஸை நாக்-அவுட் சுற்றில் வீழ்த்திய திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி கேப்டன் அஸ்வின் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். அதன்படி முதலில் களமிறங்கிய ஐட்ரீம் திருப்பூர் தமிழன் அணி, திண்டுக்கல்லின் பந்து வீச்சைத் தாக்குப் பிடிக்க முடியாமல் 19.4 ஓவர்களில் 108 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
அந்த அணிக்கு அதிகபட்சமாக பாஃப்னா 26 ரன்களும், எஸ்.கணேஷ் 17 ரன்களும் அடித்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். திண்டுக்கல் அணியின் பௌலிங்கைப் பொறுத்தவரை இளம் வீரர் பி.விக்னேஷ் 4 ஓவர்கள் பந்துவீசி வெறும் 8 ரன்கள் மட்டுமே கொடுத்து 3விக்கெட்களைக் கைப்பற்றினார். அதோடு தமிழ்நாடு பிரீமியர் தொடரில் தனது சிறந்த பந்துவீச்சை இந்த போட்டியில் பதிவு செய்தார்.