"நான் நினைத்ததை விட இந்த தொடர் சிறப்பாக அமைந்துள்ளது" - குகேஷ் பெருமிதம்! சென்னை: ஃபிடே கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன் போட்டிகள் கனடாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், இந்தியாவின் சார்பில் 17 வயதான தமிழ்நாட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் குகேஷ் 14 போட்டிகளில் ஆடி, 9 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். இதன் மூலம் 2024 ஃபிடே கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியின் சாம்பியனாக வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார்.
அது மட்டுமின்றி, செஸ் ஜாம்பவானான விஸ்வநாதன் ஆனந்த்திற்குப் பிறகு, கேண்டிடேட்ஸ் போட்டியை வென்ற இரண்டாவது வீரர் என்ற சாதனையையும் குகேஷ் படைத்துள்ளார். இந்த வெற்றியின் மூலம் உலக சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்கும் இரண்டாவது இந்தியர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். அவர் உலக செஸ் சாம்பியன்ஸ் போட்டியில் சீனாவை சேர்ந்த டிங் லிரெனை எதிர்கொள்ள உள்ளார்.
இந்த நிலையில், இது தொடர்பாக ஈடிவி பாரத்திடம் பேசிய கிரண்ட் மாஸ்டர் குகேஷ், "இந்த தொடர் எனக்கு சிறப்பு வாய்ந்ததாக இருந்தது. கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் பங்கேற்றது பல்வேறு நினைவுகளை வழங்கி உள்ளது. இந்த செஸ் தொடரில் நான் வைத்திருந்த நம்பிக்கைக்கு மேல் இந்த தொடர் அமைந்துள்ளது.
போட்டியின் தொடக்கம் முதல் கடைசி வரை கவனமுடனே இருந்தேன். அதேபோல் போட்டியும் சிறப்பாக அமைந்தது. தமிழக அரசு செஸ் போட்டிக்கு மிகுந்த உதவியாக இருந்தது. தமிழ்நாட்டில் செஸ் ஒலிம்பிக் போட்டி நடத்தியது தான், கேண்டிடேட் செஸ் தொடர் போட்டியில் பங்கேற்க உதவியாக இருந்தது. நான் உட்பட பல செஸ் வீரர்களுக்கு உதவியாக இருந்துள்ள தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
கேண்டிடேட் செஸ் தொடரில் நடந்த அனைத்து சுற்றுகளும் சிறப்பாக விளையாடியிருந்தேன். அதில் 7வது சுற்றில் ஒரு சிறிய தவறு மட்டும் செய்து விட்டேன். அதிலிருந்து மீண்டு சிறப்பாக விளையாடினேன். தொடரில் ஏற்றத் தாழ்வுகள் இருக்கத்தான் செய்தது, இருப்பினும் என்னுடைய மனநிலை சீராக இருந்ததினால் நம்பிக்கையோடு விளையாடினேன்.
உலக செஸ் போட்டிகளில் பங்கேற்பதற்கு முன்னேற்பாடுகளுடன் தயாராகுவது தான் என்னுடைய வழக்கமாக இருந்தது. அதேபோல்தான் இந்த போட்டிக்கும் தயாரானேன். இனி வரும் போட்டிகளுகளுக்கு இனிதான் திட்டமிட வேண்டும். செஸ் போட்டி ஒரு அழகான விளையாட்டு. அதை எப்பொழுதுமே மகிழ்ச்சியுடன் விளையாட வேண்டும். செஸ் விளையாடும் போது புதியவற்றை கற்றுக் கொள்ள முடியும்" எனத் தெரிவித்தார்.
இது குறித்து குகேஷின் தாய் பத்மகுமாரி ஜெகதீசன் கூறுகையில், இந்த செய்தியை அவரது தந்தை தொலைபேசி மூலம் தெரிவித்தார். நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். இந்த மகிழ்ச்சியான தருனத்தை எப்படி வார்த்தையால் கூறுவது என்று தெரியவில்லை. இது குறித்து குகேஷிடன் தொலைபேசியில் சிறுதி நேரம் பேசினேன்" எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து, அவர் எப்போதுமே செஸ் வீரராக ஆக வேண்டும் என்று விரும்புகிறாரா அல்லது வேறு திட்டங்கள் எதும் வைத்துள்ளாரா என்று கேட்டபோது, "அவர் 7 வயதில் இருந்து கிட்டதிட்ட 10 வருடங்களாக செஸ் விளையாடி வருகிறார். செஸ் மீதான ஆர்வத்தின் காரணமாகவே தற்போது இந்த இடத்தில் உள்ளார்" எனக் கூறினார்.
இதையும் படிங்க:செஸ் கேண்டிடேட்ஸ் போட்டி: 17 வயதில் சாம்பியன் வென்ற தமிழக வீரர் குகேஷ்! - D Gukesh