ஐதராபாத்:அடுத்த உலக செஸ் சாம்பியனை தேர்வு செய்யும் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு உலக செஸ் சாம்பியன் சீனாவின் டிங் லிரனை எதிர்த்து தமிழக வீரர் டி. குகேஷ் விளையாடி வருகிறார். மொத்தம் 13 சுற்றுகளை கொண்ட இந்த தொடரில் முதலில் யார் 7.5 புள்ளிகளை எடுக்கிறார்களோ அவரே உலக சாம்பியனாக அறிவிக்கப்படுவார்.
இதுவரை இரண்டு சுற்றுகள் நடைபெற்ற நிலையில், முதலாவது சுற்றில் சீன வீரர் டிங் லிரன் வெற்றி பெற்றார். தொடர்ந்து நேற்று (நவ.26) நடைபெற்ற 2வது சுற்று ஆட்டம் டிராவில் முடிந்தது. இந்நிலையில், இன்று (நவ.27) மூன்றாவது சுற்று ஆட்டம் நடைபெற்றது. வெள்ளை நிற காய்களுடன் குகேஷ் களமிறங்கினார்.
தொடக்கம் முதலே விறுவிறுப்பாக சென்று கொண்டு இருந்த ஆட்டத்தில், 37வது நகர்த்தலின் போது குகேஷ் வெற்றி பெற்றார். இதன் மூலம் புள்ளிப் பட்டியலில் சீனாவின் டிங் லிரன் மற்றும் தமிழக வீரர் டி.குகேஷ் தலா 1.5 புள்ளிகளுடன் சமநிலையில் உள்ளனர். இன்னும் 11 சுற்று ஆட்டங்கள் மீதமுள்ளன.
முதலில் 7.5 புள்ளிகளை எட்டும் நபர் அடுத்த உலக செஸ் சாம்பியனாக அறிவிக்கப்படுவார். இதற்கு முன் இந்தியாவில் விஸ்வநாதன் ஆனந்த் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை பெற்று இருந்தார். அதன் பின் 18 வயதான அந்த சாதனையை படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நடக்கும் பட்சத்தில் மிகக் குறைந்த வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற வீரர் என்ற சிறப்பையும் குகேஷ் பெறுவார்.
அதேநேரம், ஏறத்தாழ 138 ஆண்டு கால செஸ் வரலாற்றில் ஆசிய நாடுகளை சேர்ந்த இருவர் உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் கலந்து கொள்வது இதுவே முதல் முறையாகும். சாம்பியன் பட்டம் பெறுபவருக்கு இந்திய மதிப்பில் ஏறத்தாழ 18 கோடியே 80 லட்ச ரூபாய் பரிசுத் தொகையாக வழங்கப்படுகிறது.
கனடாவின் டொரண்டோ நகரில் அண்மையில் நடைபெற்ற கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் முதலிடம் பிடித்ததை அடுத்து தமிழக வீரர் டி.குகேஷ் உலக செஸ் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ஐபிஎல் ஏலத்தில் அணிகளிடம் மிஞ்சிய பணம் எங்கே போகும் தெரியுமா?